மூட்டை தூக்குபவரின் சம்பளம் இந்திய அதிபரின் சம்பளத்தைவிட அதிகமான மர்மம்

1 mins read
093406d1-335e-47a4-b4d2-782ce8362792
-

இந்தியாவின் உணவுக் கழகத்தில் பணிபுரியும் மூட்டை தூக்கும் ஊழியரின் சம்பளம் அதிபரின் சம் பளத்தைவிட அதிகமானதில் மர்மம் உள்ளதாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்தக் உணவுக்கழகத்தின் 370 ஊழியர்கள் ஒவ்வொருவரும் 4.5 லட்ச ரூபாய் மாதச் சம்பளம் பெறுவதாக சர்ச்சை கிளம்பியது. (அதி பரின் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சம்) நிபுணர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அது உண்மை என்று கண்டுபிடித்ததோடு சம்பள விவகாரத்தில் முறைகேடு நடப்பதாகவும் அபாயச் சங்கு ஊதியது.

இந்த 370 பேரைத் தவிர மற்றவர்கள் ரூ.80,000 பெறுகிறார்கள். மேலும் 4.5 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு நிரந்தர ஊழியர் ஒருவர் செய்யும் அதே வேலையை குத்தகை ஊழியர் வெறும் 10,000 ரூபாய் சம்பளத்தில் செய்கிறார் என்றும் கூறிய அக்குழு, உணவுக் கழகத்தின் சம்பளத்திற்கு மட்டும் 1,800 கோடி ரூபாய்க்குத் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல் ஏற்கத் தக்கதல்ல என்றது.

உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தை நேற்று முன்தினம் விசாரித்தபோது, குழுவின் பரிந்துரைகளைக் கடைப்பிடித்து உண்மையைக் கண்டறிவதோடு தவறுகளைக் களைய வேண்டும் என்று கழகத்திற்கு உத்தரவிட்டது.

இவற்றைச் செய்யத் தவறினால் நீதிபதி ஒருவரின் தலைமையில் கடுமையான குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் அமர்வு நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், ஏ.கே.சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோர் கூறினர். படம்: தி இந்து