ஜெர்மன் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த எழுவர் காயம்

ஜெர்மன் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த எழுவர் காயம்

1 mins read
baf98cdf-59c5-4af1-be9a-9268cc883b59
தாக்குதலில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சோகத்தில் மூழ்கி இருந்தது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட கார் தாக்குதலில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஏழு பேரும் காயமடைந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்து உள்ளது.

அதிகாரிகள் தரப்பில் தமக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்த எழுவரில் மூவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக அந்தச் செய்தி கூறியது.

தாக்குதலில் காயமடைந்தவர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (டிசம்பர் 21) தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான எல்லா உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

“ஜெர்மனியின் மாக்டெபர்க் நகரில் நடத்தப்பட்ட கொடூர, மூடத்தனமான தாக்குலை இந்தியா கண்டிக்கிறது.

“அந்தத் தாக்குதலில் மதிப்புமிக்க பல உயிர்கள் பறிபோனதோடு ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

“உயிரிழந்தவர்களை நினைவில் பதித்து அவர்களின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே, காயமடைந்த இந்திய நாட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்து உள்ளது.

கொலைக் குற்றச்சாட்டு

இதனிடையே, கிறிஸ்துமஸ் சந்தைக்குள் காரை ஓட்டிச் சென்று உயிருடற்சேதம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாலெப் எனும் அந்த 50 வயது ஆடவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஜெர்மனியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜெர்மனிதாக்குதல்மரணம்