கேரளாவில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

கேரளாவில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

2 mins read
விஞ்ஞானிகளுக்கே சவாலாக விளங்கும் மர்மம்
afe318e5-1315-4621-a96e-74d839343c59
கேரள மாநிலத்தில் உள்ள ‘கோடினி’ கிராமத்தில் தற்போது 550க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ‘கோடினி’ கிராமம், அங்குள்ள அசாதாரணமான பிறப்பு விகிதத்தால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏறக்குறைய 2,000 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்தச் சிறிய கிராமத்தில், தற்போது 550க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது ஒரு தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இரட்டையர்கள் உள்ளனர். இரு குழந்தைகளும் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களை அடையாளம் காண்பதில் பள்ளி ஆசிரியர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது,” எனத் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணமாகி வேறு ஊர், மாநிலங்களுக்குச் சென்றாலும், அவர்களுக்கும் இரட்டைக் குழந்தைகளே பிறப்பதாகக் கூறப்படுகிறது. இது உலகளவில் ஓர் அபூர்வ நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் இக்போ-ஓரா பகுதியில் இதுபோன்ற இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகம்.

அங்கு அவர்கள் உண்ணும் ஒரு குறிப்பிட்ட வகை மரவள்ளிக்கிழங்குதான் அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடினி கிராமம் குறித்து இந்திய, வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றன.

கிராமத்தின் குடிநீர், உணவுப் பழக்கம், அங்கு நிலவும் சுற்றுச்சூழல் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், நைஜீரியாவைப் போல இவர்களது உணவிற்கும் இரட்டையர் பிறப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் அறிஞர்கள் இவர்களின் மரபணுவை ஆய்வு செய்தபோதும், மற்ற கேரள மக்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் கண்டறியப்படவில்லை.

இதனால், ஒரே கிராமத்தில் இத்தனை இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்றுவரை ஒரு புரியாத மர்மமாகவே நீடிக்கிறது.

இதற்கான காரணத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இரட்டையர்பிறப்பு விகிதம்குழந்தைகள்