கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகிய 500 பேர் பாதிப்பு

கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகிய 500 பேர் பாதிப்பு

2 mins read
28801aa4-f036-4976-9f15-cfbddcf38abe
கடந்த ஐந்து நாள்களாக குடியிருப்பாளர்கள் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் காட்லோடியா பகுதியில் வீட்டுவசதி சங்கங்களைச் சேர்ந்த குடியிருப்பில் உள்ள நூற்றுக்கணக்கானோர் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

கடந்த ஐந்து நாள்களாக அக்குடியிருப்பாளர்கள் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர்க் குழாய்களில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக, அப்பகுதிக்கு நர்மதா நதியில் இருந்து விநியோகிக்கப்படும் நீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையே (மே 29) இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் சனிக்கிழமை முழுவதும் தாங்கள் அவதிப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை நீர் விநியோகம் மீண்டும் தொடங்கியபோதும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால், இரண்டாம் கட்டச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே, 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றதாகக் குறிப்பிட்ட அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் பன்சநிதி பாணி, அவர்களில் பெரும்பாலானோர் உடனுக்குடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாதிப்புக்குள்ளான ஆகாங்ஷா அடுக்குமாடிக் குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவரான ராகேஷ்பாய் படேல், ஏறக்குறைய 500 குடியிருப்பாளர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் சுகாதாரக் குழுக்கள் மக்களைப் பரிசோதித்து வருவதாகவும் அதிக பாதிப்புள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்டவை தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சராசரியாக, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு படேலை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்