இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3,500 பொதுநல மனுக்கள் தேக்கம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3,500 பொதுநல மனுக்கள் தேக்கம்

1 mins read
a4455028-3143-4c49-ab96-f8febcdc11e5
கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய உச்ச நீதிமன்றம் 1,872 பொதுநல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3,500க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றும் அவற்றில் ஒரு வழக்கில் கடந்த 42 ஆண்டுகளாகத் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அந்நாட்டின் சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களில் 698 மனுக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களில் பெரும்பாலானவை சுற்றுச்சூழல், நிலச் சட்டங்கள், வேளாண் குத்தகை விவகாரங்கள் போன்றவை தொடர்பானவை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 10ஆம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களின் எண்ணிக்கை 3,525 என்று சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சென்ற வாரம் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

இவ்வாண்டில் மட்டும் இதுவரை 293 பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மிகவும் பழைமையான பொதுநல மனு 1984ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இரு மனுக்கள் 1985ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ளன. அம்மூன்றும் பொதுநல வழக்கறிஞர் எம்.சி.மேத்தாவால் இந்திய அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை.

பொதுநல வழக்குகளில் பலவற்றுக்கு இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அவற்றைத் தாக்கல் செய்த மனுதாரர்களில் பலர் காலமாகிவிட்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் உச்ச நீதிமன்றம் 1,872 பொதுநல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 80,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்