மோசடிப் பேர்வழியிடம் ஏமாந்த முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்!

மோசடிப் பேர்வழியிடம் ஏமாந்த முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்!

2 mins read
e01d15e6-74c8-4225-adf3-1490263b8942
மோசடிப் பேர்வழி எனக் கூறப்படும் மிரினங்க் சிங், 25. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர், ரஞ்சி கிரிக்கெட் வீரர், காவல்துறைத் துணைத் தலைமை இயக்குநர் - இப்படிப் பல போர்வைகளில், பலரை ஏமாற்றி பணத்தையும் ஆடம்பரப் பொருள்களையும் மோசடி செய்துள்ளதாக 25 வயதான மிரினங்க் சிங்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பன்டையும் ஏமாற்றி, ஒரு கோடி ரூபாய்க்குமேல் அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தாஜ் ஹோட்டலுக்கு ரூ.5.5 லட்சம் பணம் செலுத்தாததற்காக மிரினங்க் சிங்கை டெல்லி காவல்துறை கைதுசெய்துள்ளது.

முன்னணி காலணி நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறி, கடந்த 2022 ஜூலை 22 முதல் 29 வரை, தாஜ் பேலஸ் ஹோட்டலில் சிங் தங்கியிருந்தார்.

அதற்கான தொகையைத் தமது நிறுவனம் செலுத்தும் எனக் கூறிய அவர், பின்னர் இணையம் வழியாக ரூ.2 லட்சம் செலுத்தியதற்கான பரிவர்த்தனை எண்ணையும் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது போலியானது எனப் பின்னர் கண்டறியப்பட்டது.

அதன்பிறகு பலமுறை அவரைத் தொடர்புகொண்டு பணம் செலுத்தும்படி ஹோட்டல் நிர்வாகம் கேட்டபோதும், இப்போது அப்போது என சிங் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி ஹாங்காங்கிற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் சிங் பிடிபட்டார். விசாரணையின்போதும் தான் மூத்த ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி, விசாரணை அதிகாரிகளிடமிருந்து அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்பட்டது.

எம்பிஏ படித்துள்ள சிங்மீது மும்பை, கர்னால், மொகாலி ஆகிய இடங்களிலும் குற்றவியல் வழக்கு பதிவாகியிருந்தது.

குறிப்புச் சொற்கள்