2008 மும்பை தாக்குதல்: ‌‌ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீதிமன்ற விசாரணை

2 mins read
6bd6f3c7-7697-4f1f-a2bb-ed4bc363a6b4
மும்பை உயர்நீதிமன்றம். - படம்: ecommitteesci.gov.in / இணையம்

மும்பை: கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நீதிமன்ற விசாரணை மீண்டும் தொடங்கவுள்ளது.

திங்கட்கிழமை (நவம்பர் 3) மும்பை உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட அபு ஜுண்டால் மீதான நீதிமன்ற விசாரணை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 2018ஆம் ஆண்டு வேறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

2018ல் அந்த நீதிமன்றம், ரகசிய ஆவணங்களை ஜுண்டாலிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து டெல்லி காவல்துறை, இந்திய சிவில் விமான அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஆர்என் லத்தா ஏற்றுக்கொண்டார்.

“எல்லா மேல்முறையீட்டு மனுக்களும் அனுமதிக்கப்படுகின்றன. நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கும் பழைய (நீதிமன்ற) உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று உயர்நீதிமன்றம் கூறியது. இது, இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை மீண்டும் தொடங்க வழிவகுத்துள்ளது.

மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஸபியுதீன் அன்சாரி என்றும் அழைக்கப்படும் அபு ஜுண்டால், 2008 மும்பை தாக்குதல்களை நடத்திய 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளைக் கையாண்டவர் என நம்பப்படுகிறது. அவரின் வழக்கு 2018ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்து வந்துள்ளது.

2012ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஜுண்டால், இந்திய அரசாங்கத்திடமிருந்து சில பயண ஆவணங்களைப் பெற கோரிக்கை விடுத்திருந்தார். தனது தரப்பு வாதத்துக்கு அவை முக்கியமானவை என்று அவர் கூறியிருந்தார்.

குற்றவியல் நடைமுறை கோட்பாடு (Code of Criminal Procedure) சட்டப் பிரிவு 91இன்கீழ் ஜுண்டால் அந்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு கோரிக்கையை சமர்ப்பித்தார். இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு சவூதி அரேபியாவின் டம்மம் நகரில் தான் கைது செய்யப்பட்டதை ஆவணங்கள் காட்டும் என்பது அவரின் வாதம்.

ஆனால், ஜுண்டால் இந்தியாவுக்குள் நுழைந்ததும் டெல்லி விமான நிலையத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்