சென்னை நோக்கிச் சென்ற லாரியிலிருந்து 1,600 ஐஃபோன்கள் திருட்டு

சென்னை நோக்கிச் சென்ற லாரியிலிருந்து 1,600 ஐஃபோன்கள் திருட்டு

1 mins read
e0eba1d4-b14f-4158-b26f-8b59f818f478
மாதிரிப்படம்: - ஊடகம்
Google News Preferred Icon

சாகர்: சரக்கு லாரியிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள, கிட்டத்தட்ட 1,600 ஐஃபோன்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.

இதனையடுத்து, பணியில் கவனக்குறைவுடன் இருந்ததாகக் கூறி, காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்; வேறு இருவர் அவர்களின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஐஃபோன்களுடன் கூடிய கொள்கலனை எடுத்துச் சென்ற லாரியின் ஓட்டுநரைப் போதைப்பொருளை உட்கொள்ள வைத்து, அவரது வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு, கொள்ளையர்களுடன் ஐஃபோன்களுடன் சென்றதாக சாகர் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய் உய்கே தெரிவித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அரங்கேற்றப்பட்டதாக பிடிஐ செய்தி குறிப்பிட்டது.

“ரூ.12 கோடி மதிப்புள்ள 1,600 ஐஃபோன்கள் கொள்ளை போனதாக லாரியின் உரிமையாளர் சொல்வது உண்மைதானா என விசாரித்து வருகிறோம். ஐஃபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை காவல்துறையைத் தொடர்புகொள்ளவில்லை,” என்று திரு சஞ்சய் கூறினார்.

“அந்தக் கொள்கலன் லாரி ஹரியானா மாநிலம், குருகிராமிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மத்தியப் பிரதேச மாநிலம், நர்சிங்பூர் மாவட்டத்தில் அவ்வாகனம் இருந்தபோது கொள்ளை தொடங்கியது. முதற்கட்ட விசாரணை முடிந்ததும் வழக்கு பதிவுசெய்யப்படும்,” என்று அவர் சொன்னார்.

ஐஃபோன்கள் கொள்ளைபோனதை அடுத்து, அந்த லாரியின் ஓட்டுநர் அம்மூன்று காவல்துறை அதிகாரிகளை அணுகி நடந்ததை விவரித்தார் என்றும் அதனைக் கேட்டபின் அவர்கள் புகார் பதிவுசெய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்