கள்ளச் சாராயம் அருந்திய 14 பேர் மரணம்; 22 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

கள்ளச் சாராயம் அருந்திய 14 பேர் மரணம்; 22 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

1 mins read
b27e57ed-df33-4948-9224-d79f3c98d56d
சாராயம் அருந்திப் பலரும் மாண்டதால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர். (வலப்படம்) சாராயம் காய்ச்சி விற்றதாகக் கூறி, கைதுசெய்யப்பட்டுள்ள யோகேஷ் வான்கடே. - படங்கள்: பிடிஐ
Google News Preferred Icon

புனே: கள்ளச் சாராயம் அருந்தியதால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் சகோதரர்கள் இருவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துயரம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் நடந்தது.

இதன் தொடர்பில் இதுவரை கள்ளச் சாராயக் கடை உரிமையாளர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மிகவும் கடுமையானது என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.

அத்துடன், கள்ளச்சாராயக் கட்டமைப்பை முற்றிலும் வேரறுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

“மெத்தனால் போன்ற பொருளைப் பயன்படுத்திச் சாராயம் காய்ச்சியுள்ளனர்,” என்று முதல்வர் ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார்.

இதனிடையே, சாராயத்தில் நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. எனினும், உடற்கூறாய்வு, தடயவியல், நச்சியல் அறிக்கைகள் கிடைத்த பின்னரே உயிரிழப்புகளுக்கான உண்மைக் காரணம் தெரியவரும்.

கள்ளச் சாராயம் காய்ச்சியதாகக் கூறப்படும் யோகேஷ் வான்கடேமீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கள்ளச் சாராய விநியோகத்தைத் தடுக்கத் தவறிவிட்டதாகக்கூறி, மாநிலக் காவல்துறை அதிகாரிகள் ஒன்பது பேரும் கலால்துறை அதிகாரிகள் 13 பேரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்