இஸ்‌ரோவிலிருந்து ஓராண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்

இஸ்‌ரோவிலிருந்து ஓராண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்

2 mins read
3e8d8ac2-3719-4564-adfb-f86d721dcbb2
விஞ்ஞானிகளுக்கு அதிகப்படியான ஊதியமும் அவர்களின் திறமைக்கேற்ப பல்வேறு புதிய வாய்ப்புகளையும் வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வருவதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ‘இஸ்ரோ’வில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 120 விஞ்ஞானிகள் விலகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளோர் பட்டியலில் பத்து முக்கியமான விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகி உள்ளதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புதுத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பது ஆகியவைதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதவி விலக முக்கியமான காரணிகள் என ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளுக்கு அதிகப்படியான ஊதியமும் அவர்களின் திறமைக்கேற்ப பல்வேறு புதிய வாய்ப்புகளையும் தர தனியார் நிறுவனங்கள் முன்வருவதையும் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவில் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன் பலனாக, நாடு முழுவதும் புதிதாக 400 விண்வெளி புதுத்தொழில் நிறுவனங்கள் தோன்றியுள்ளன.

‘இஸ்ரோ’ அறிவித்த பல்வேறு உயர்நிலை விண்வெளித் திட்டங்களை உரிய கால கெடுவுக்குள் முடிக்க இயலவில்லை. இதுவும் விஞ்ஞானிகள் பணியிலிருந்து விலகக் காரணம் என கருதப்படுகிறது.கடந்த 2018 முதல் 2022 வரை இஸ்ரோவின்கீழ் இயங்கும் அனைத்து ஆய்வு மையங்களிலும் இருந்து 387 விஞ்ஞானிகள் பணியிலிருந்து விலகினர்.

இந்நிலையில், கடந்த 12 மாதங்களில் மட்டும் மூத்த விஞ்ஞானிகள் உட்பட ஏறக்குறைய 120 பேர் பணியில் இருந்து விலகிவிட்டனர்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை ‘இஸ்ரோ’ அடுத்தடுத்து செயல்படுத்த உள்ளது. இத்திட்டங்களில் ஏராளமான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களின் பதவிவிலகல் அல்லது விருப்ப ஓய்வுத் திட்டங்களை வழக்கமான நடைமுறையாக ஏற்று ஒப்புதல் அளிக்கக் கூடாது என இஸ்ரோவின் முக்கியமான மையங்களுக்கு மத்திய அரசின்‌ விண்வெளித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்