இந்தியா, பங்ளாதேஷ் எல்லையில் 1,104 ஊடுருவல் முயற்சிகள்: 2,500 பேர் கைது

2 mins read
c596b401-3d2d-4e07-9411-436c7b51195b
நித்தியானந்த் ராய். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருல் முயற்சிகள் அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய முயற்சிகள் குறித்தும் கைதானவர்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் பல்வேறு தரவுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியா, பங்ளாதேஷ், பாகிஸ்தான், பூட்டான், மியன்மார் ஆகிய நாடுகளுடனான இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்த நிலையில், ஆக அதிகமாக பங்ளாதேஷ் எல்லையில் 1,104 ஊடுருவல் முயற்சிகள் கண்டறியப்பட்டதாக அமைச்சர் நித்தியானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 11 மாதங்களில் 2,500க்கும் மேற்பட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை பிற எல்லைப் பகுதிகளில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் ஆக அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதே வேளையில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றார் அமைச்சர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் ஏறக்குறைய 8,500க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக 20,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4,096 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-பங்ளாதேஷ் இடையேயான எல்லையில்தான் ஆக அதிகமாக, கடந்த 2014 முதல் 2024 வரை 7,500க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக 18,000 பேர் கைதாகியுள்ளனர் என்று அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் 93.25% வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 154 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வேலி அமைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1,643 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியா-மியன்மார் எல்லையில் 9.21 கிலோ மீட்டர் மட்டுமே வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் இந்தப் பணி ஏறக்குறைய 79% முடிவடைந்துள்ளது. மொத்தம் 3,239 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய எல்லைப் பகுதியில் 856 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வேலி அமைக்கப்படவில்லை என்று திரு ராய் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் பங்ளாதேஷ் எல்லையில் 2,160 பேரும் 2019ல் 1,109 பேரும் 2022ல் 2,076 பேரும் 2024ல் 2,525 பேரும் கைதாகியுள்ளனர் என்று மத்திய அரசு மேலும் விரிவாக தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்