அண்ணாமலை, தமிழிசை உட்பட 1,100 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு

அண்ணாமலை, தமிழிசை உட்பட 1,100 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு

2 mins read
b6d9038d-b766-4a16-8ec8-dcc434dd3025
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் சுமார் 1,100 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டம் நடத்த இருந்த பாஜக கட்சியினரைத் தமிழகக் காவல்துறை அண்மையில் கைது செய்தது.

கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 1,100 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபானக் கிடங்கு மற்றும் பல்வேறு மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 6-ல் அதிரடிச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

முறைகேடு தொடர்பாக அதிருப்திக் குரல் எழுப்பி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை திங்கட்கிழமை (மார்ச் 17) முற்றுகையிடப்போவதாக தமிழக பாஜக அறிவித்தது.

இதையடுத்து, தமிழகக் காவல்துறை அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டத்துக்கு சாலிகிராமத்திலிருந்து புறப்பட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தமது வீட்டுக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.

போராட்டத்தில் கலந்துகொள்ள பனையூரிலுள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி, மூத்த தலைவர் எச். ராஜா, அமர்பிரசாத் ரெட்டி, நாராயணன் திருப்பதி உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்த நூற்றுக்கணக்கான பாஜவினரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழகக் காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்திய பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுவிட்டு போராட்டத்துக்குப் புறப்பட்ட வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிறகு, இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் சுமார் 1,100 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்