10 மாதத்திற்குள் தனித்துவமான ‘ஏஐ’: இந்தியா உறுதி

10 மாதத்திற்குள் தனித்துவமான ‘ஏஐ’: இந்தியா உறுதி

2 mins read
e3e6e6e8-46ba-4f41-8833-edac4b735ecf
உத்கர்ஷ் ஒடிசா மாநாட்டில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியா தனது ‘ஏஐ’ கருவியை 10 மாதங்களுக்குள் உருவாக்கி விடும் என்று கூறியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ‘சாட்ஜிபிடி’, ‘டீப்சீக்’ போன்று இந்தியா தனது ‘ஏஐ’ கருவியை 10 மாதங்களுக்குள் உருவாக்கி விடும் என்று மத்திய மின்னியல், தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் தன்னிறைவை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்கர்ஷ் ஒடிசா மாநாட்டில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதற்கான அடித்தளம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டதாகவும் இந்தியப் பயனர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்றும் கூறினார்.

“கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் ‘ஏஐ’ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். முதல் நான்கு மாதத்திலேயே அதற்கான கட்டமைப்பின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

“இந்தியாவின் ஏஐ திட்டத்திற்கான முதல் தூண் என கருதப்படும் பொதுக் கணினியல் வசதியை (Common Compute Facility) அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த வசதி, மேம்பட்ட கணினியியல் வளங்களுக்கான அணுகலை வழங்கும்,” என்று அவர் கூறினார்.

விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நான்காவது கட்டம் ஏஐ-யின் பாதுகாப்பு தொடர்பானது. ஏஐ பாதுகாப்பு நிறுவனம் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுதொடர்பாக ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுடன் குழுக்கள்நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன.

வளர்ந்து வரும் நிறுவனங்கள், 10 முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் 8 முதல் 10 மாதங்களுக்குள் இது தயாராகிவிடும்.

இந்தியாவின் தனித்துவமான மொழியியல், பண்பாட்டுப் பன்முகத்தன்மைக்கு ஏற்ப இது உருவாகும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், சீனா அண்மையில் அறிமுகப்படுத்திய ‘டீப்சீக்’ ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி) ஆகிய அமெரிக்க ‘ஏஐ’ கருவிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், உலகத்தரம் வாய்ந்த ஏஐ தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசெயற்கை நுண்ணறிவுசீனாதயாரிப்பு