சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு நாடு. நமது தட்டில் இருக்கும் உணவிலிருந்து, நமது வீடுகளில் எரியும் மின்சாரம் வரை 90 விழுக்காட்டிற்கும் மேலானவை வெளிநாடுகளில் இருந்தே வருகின்றன. அமைதியான காலங்களில் இது ஒரு சிறந்த வணிக மாதிரியாகத் தெரிந்தாலும், போர் மேகங்கள் சூழும் காலங்களில் இதுவே நமது பலவீனமாகவும் மாறுகிறது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் மோதல்கள் தீவிரமடைவதால் சிங்கப்பூர் தனது இறக்குமதி வளங்களைப் பன்முகப்படுத்த வேண்டியுள்ளது. இதில் பல சவால்கள் உள்ளன.
உணவு, எரிசக்தி இறக்குமதி
சிங்கப்பூர் தற்போது தனது உணவு, எரிசக்தித் தேவைகளுக்காக ஆசியாவிற்கு அப்பாற்பட்ட நாடுகளை நாடத் தொடங்கியுள்ளது. ஆனால், இதில் உள்ள மிகப்பெரிய சவால் தளவாடச் செலவினால் உண்டாகும் விலையேற்றம். வெகுதொலைவிலுள்ள நாடுகளிலிருந்து பொருள்களைக் கொண்டுவரும்போது, கப்பல் போக்குவரத்துச் செலவும் காப்புறுதித் தொகையும் பலமடங்கு உயரும். இது இறுதியில் மக்களின் அன்றாடச் செலவுகளை மேல்நோக்கிக் கொண்டுசெல்லும். இப்போதைக்கு விலையேற்றம் மக்களைப் பரவலாகப் பாதிக்கவில்லை எனினும் நாட்டைத் தயார்நிலைக்குக் கொண்டுசெல்ல அரசாங்கத்தின் திட்டங்களும் முன்னெடுப்புகளும் மிகவும் அவசியம்.
உணவுப் பாதுகாப்பு
சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தரத்திற்கு இணங்கக்கூடிய புதிய வணிகர்களைக் கண்டறிவது ஒரு நெடிய செயல்முறை. திடீரென ஒரு நாடு ஏற்றுமதியை நிறுத்தினால், உடனடியாக வேறொரு நாட்டிடமிருந்து அதே தரத்தில் பொருள்களைப் பெறுவது அவ்வளவு எளிதன்று. இந்தியாவின் அரிசி ஏற்றுமதியும் மலேசியாவின் கோழி ஏற்றுமதியும் தடைபட்டது நமக்கு நினைவிருக்கலாம். புதிய வணிக ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கும், அந்த நாடுகளின் உள்கட்டமைப்பை நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும் சில ஆண்டுகள் தேவைப்படும்.
2030ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. எனினும், தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மைக்கு அதிக முதலீடும் மின்சாரமும் தேவைப்படுகின்றன. நிலப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள ஒரு நாட்டில், வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே உழவுத் தொழிலுக்கு நிலத்தை ஒதுக்குவது மிகவும் கடினமான செயல்.
மின்சார உற்பத்தி
எரிசக்தி உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால் மேலும் சிக்கலானது. நமது மின்சார உற்பத்தியில் பெரும்பகுதி இயற்கை எரிவாயுவையே நம்பியுள்ளது. சூரிய சக்திக்கோ காற்றாலை மின்சாரத்திற்கோ நமக்குத் தேவையான நிலப்பரப்பு இல்லை. வேறு நாடுகளிலிருந்து கம்பிவடங்கள் மூலம் மின்சாரத்தைக் கொணரும் திட்டங்கள் இருந்தாலும், அவை சவால்மிக்கவை. தற்காலச் சூழலில் அது சாத்தியப்படாது. அனைத்து நாடுகளும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
பதற்றச் சூழலில் முளைக்கும் வாய்ப்புகள்
ஒவ்வொரு பதற்றகாலத்தையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறினார். இது ஒரு நல்ல கற்றல் தருணம். உள்ளூர் உணவு உற்பத்திகளை ஆதரிப்பது உள்ளூர் விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும்; அவர்களின் எதிர்காலமும் நாட்டின் தன்னம்பிக்கையும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம், துணைப் பிரதமர் கான் கிம் யோங் இருவரும் சுட்டிக்காட்டியது போல, சிங்கப்பூர் இப்போது ஒரு ‘மாற்றுக் காலத்தை’ நோக்கி நகர்கிறது. இறக்குமதிச் சார்பைக் குறைப்பது என்பது வெறும் பொருளியல் முடிவு மட்டுமன்று. அது ஒரு தேசியப் பாதுகாப்பு நடவடிக்கை.
தொடர்புடைய செய்திகள்
நாம் செய்ய வேண்டியவை
அதற்கு நாம் என்ன செய்யலாம்? உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உணவு விரயத்தைக் குறைக்க வேண்டும். மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க முயல்வது அவசியம். சொந்த வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, நமது பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவது, எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க நாம் வழங்கும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பு.
முக்கியமாக, நெருக்கடியான காலங்களில் பதற்றமடைந்து பொருள்களை வாங்கிக் குவிப்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. மாறாக, அது தேவையில்லாத தட்டுப்பாட்டையே உருவாக்கும்.
வெளிநாட்டு மோதல்கள் நமது உள்ளூர் அமைதியைக் குலைக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. அதை நாம் அனுமதிக்கக்கூடாது. இப்பதற்றநிலையும் விலையேற்றமும் சமூகத்தில் அனைவரையும் பாதிக்கும். ஒருவருக்கொருவர் துணையாக நின்று இந்தச் சிரமத்தைக் கடக்க உறுதிபூணுவோம்.

