எல்லையற்ற சவால்களும் உள்நாட்டுச் சுற்றுலாவின் முக்கியத்துவமும்

எல்லையற்ற சவால்களும் உள்நாட்டுச் சுற்றுலாவின் முக்கியத்துவமும்

2 mins read
cdd76a87-0773-4ead-be37-344906f89624
செந்தோசாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான ‘ஸ்கைஸ்லைட்ஸ்’ (Skyslides).  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜூன் மாதப் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டாலே பலரது சிந்தனை சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும். 

ஆனால் தற்போதைய உலகளாவிய சூழலைக் கவனிக்கும்போது வெளிநாட்டுப் பயணம் என்பது ஒரு நிம்மதியான பொழுதுபோக்காக இல்லாமல் பெரும் சவாலாகவே உருவெடுத்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம், உலகளாவிய பூசல்கள் காரணமாக அன்றாட உணவிலிருந்து எரிபொருள் வரை வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோதாதென்று கட்டாய உழைப்பு முறை தொடர்பான வர்த்தக விசாரணைக்குப் பிறகு, சிங்கப்பூர் ஏற்றுமதிப் பொருள்களுக்கு அமெரிக்கா 12.5 விழுக்காடு கூடுதல் வரி விதிக்க முன்மொழிந்துள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டை நமது வர்த்தக, தொழில் அமைச்சு திட்டவட்டமாக மறுத்த போதிலும், இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் நமது பொருளியலிலும் மக்களின் செலவினங்களிலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

மறுபுறம் இயற்கைச் சீற்றங்கள் பயணங்களைத் திட்டமிடுவதைக் கடினமாக்கியுள்ளன. ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான சூறாவளி காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானச் சேவைகளை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. 

இத்தகைய நிச்சயமற்ற சூழலில் கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தையும் நேரத்தையும் நமது சொந்த நாட்டிலேயே செலவிடுவது தற்போதைய நிலைமைக்கு ஆக்ககரமான தேர்வாகலாம்.

சிங்கப்பூரின் பொழுதுபோக்குத் துறை உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டு பொழுதுபோக்குப் பூங்காக்களுக்கு இணையாக ‘ஸ்கைபார்க் செந்தோசா’வில் ஜூன் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படும் தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான ‘ஸ்கைஸ்லைட்ஸ்’ (Skyslides) வசதி மூலம் அனுபவிக்கலாம். 

இயற்கையை விரும்புவோருக்கு மண்டாய் வனவிலங்குப் பூங்காவின் ஏழு ஹெக்டர் பரப்பளவிலான ‘ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ ஒரு சிறந்த வரப்பிரசாதம். ஆப்பிரிக்காவின் அரிய வகை ஒகாபி (Okapi) விலங்கு, குள்ள நீர்யானைகள், பாவோபாப் மரங்கள் என காங்கோ படுகையின் அழகை இது நம் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துள்ளது.

பணத்தைச் சேமிப்பதையும் விமான நிலையக் குழப்பங்களைத் தவிர்ப்பதையும் தாண்டி இந்த உள்நாட்டு விடுமுறை நம் மன அமைதிக்கு மிக அவசியமானது. 

பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் தொடங்கி வைத்த ‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’ (Screen Smart from the Start) திட்டத்தின் நோக்கத்தை நாம் இந்த விடுமுறையில் செயல்படுத்தலாம். 

பெற்றோரில் 37 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் மின்னிலக்கப் பயன்பாட்டை வழிநடத்துவதில் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நடத்திய கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.

பிள்ளைகளுக்குத் திறன்பேசிகளைத் தாமதமாக வழங்குவது, படுக்கையறை மற்றும் உணவு நேரங்களில் மின்னணுச் சாதனங்களைத் தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இந்த ஜூன் மாதத்தில் திறன்பேசித் திரைகளில் நேரத்தை வீணடிப்பதைக் குறைத்துவிட்டு நம் குடும்பத்தினருடன் சிங்கப்பூரின் அழகிய இடங்களை உலா வரலாம்.

தொழில்நுட்பத்திலிருந்து விடுபட்டு குடும்ப உறவுகளைப் பலப்படுத்தி நம் சொந்த மண்ணின் சிறப்புகளை மீண்டும் கண்டறிவோம்.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவைசாங்கிபயணம்விடுமுறை