நீங்கா நினைவுகளுடன் புதிய அத்தியாயத்தில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

நீங்கா நினைவுகளுடன் புதிய அத்தியாயத்தில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

3 mins read
நிலையத்தின் 2026 தமிழ்த் திருவிழாவும் 49வது ஆண்டுப் பரிசளிப்பு விழாவும்
497d16c3-9e55-4ebf-9706-703e4fee8e80
ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் தமிழ்த் திருவிழாவில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான ஏறத்தாழ 800 மாணவர்கள் இவ்வாண்டு கலந்துகொண்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 4
Google News Preferred Icon

பீட்டி சாலையில் கடந்த 44 ஆண்டுகளாக இயங்கிவரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், அடுத்த ஆண்டு ஜனவரியில் விக்டோரியா லேனில் அமைந்துள்ள முன்னாள் ஸ்டாம்ஃபோர்ட் தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் காணவுள்ளது.

இந்த இடமாற்றத்திற்கு முன்னதாக, தற்போதைய வளாகத்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், தனது முக்கிய இறுதி நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் நிலையம் அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் 49வது ஆண்டுப் பரிசளிப்பு விழாவும் 2026க்கான தமிழ்த் திருவிழாவும் சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெற்றன.

மாணவர்கள், ஆசிரியர்களின் முயற்சிகளை அங்கீகரித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு இயக்குநர் ஹெங் போயி ஹோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு இயக்குநர் ஹெங் போயி ஹோங்கும் (வலது) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பனும்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு இயக்குநர் ஹெங் போயி ஹோங்கும் (வலது) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பனும். - படம்: யோகிதா அன்புச்செழியன்

தேசியத் தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 50 கல்வி விருதுகள், நல்ல முன்னேற்றத்திற்காக 25 விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருது 17 வயது முருகானந்தம் புகழினிக்கு வழங்கப்பட்டது.

நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருது 17 வயது மாணவி முருகானந்தம் புகழினிக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டது.
நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருது 17 வயது மாணவி முருகானந்தம் புகழினிக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டது. - படம்: யோகிதா அன்புச்செழியன்

“கட்டடங்கள் மாறலாம், ஆனால் நிலையத்தின் இலக்கு, பண்புநலன்கள், சமூகம் ஆகியவை எப்போதுமே வலுவாக இருக்கும்,” என்று விழாவில் உரையாற்றிய திருவாட்டி ஹெங் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பெரிய வகுப்பறைகள் அமையவுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய வளாகத்திலிருக்கும் பழைமையான திருவள்ளுவர் சிலையும் புதிய வளாகத்திற்கு மாறவுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த 44 ஆண்டுகளாகப் பல இனிய நினைவுகளையும் மைல்கற்களையும் தாங்கியுள்ள தற்போதைய வளாகத்திற்கு நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

1945ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜஸ் தமிழ் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1982, 1983ல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் எனப் பெயர் மாற்றம் கண்ட வரலாற்றை அவர் நினைவுகூர்ந்தார்.

புதிய வளாகத்திற்கான இடமாற்றம் குறித்துப் பேசிய அவர், “மாற்றம் முடிவல்ல, அது புதிய பயணத்தின் தொடக்கம்,” என்று குறிப்பிட்டார்.

புதிய வாய்ப்புகள், கனவுகள், சாதனைகளை நோக்கி உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பயணிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

உயர்வு என்பது பதவியிலோ மதிப்பெண்களிலோ மட்டும் அளவிடப்படுவதில்லை, நற்பண்புகளின் மேன்மையிலும் கருணைமிக்க உள்ளத்திலுமே உண்மையான உயர்வு வெளிப்படுகிறது என்று அவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பீட்டி சாலை வளாகத்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், விழாவின் இறுதியில் ஒரு சிறப்பான முத்தாய்ப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.

தூய்மையையும் மரபையும் குறிக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு மண்பானை நினைவுக் கலசமாகப் (Time Capsule) பயன்படுத்தப்பட்டது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் சீருடை, வரலாற்றுப் புத்தகம், நிலையத்தின் அதிகாரபூர்வ முத்திரை, தற்போதைய கட்டடத்தின் வரைபடம், புகைப்படங்கள் உள்ளிட்ட பல நினைவுப் பொருள்கள் பானையில் வைக்கப்பட்டன.

நினைவுக் கலசமாக சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு மண்பானையில் பல்வேறு நினைவுப் பொருள்கள் வைக்கப்பட்டன.
நினைவுக் கலசமாக சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு மண்பானையில் பல்வேறு நினைவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

இந்த நினைவுக் கலசம் புதிய வளாகத்தின் மரபுடைமைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, நிலையத்தின் 131வது ஆண்டு நிறைவான 2076ஆம் ஆண்டில் திறக்கப்படும்.

அதன்பின்னர், வளர்ச்சியையும் செழிப்பையும் எதிர்காலத் தலைமுறையின் தொடர்ச்சியையும் குறிக்கும் அடையாளமாக, நிலையத்தின் ஆலோசனைக்குழுத் தலைவர் முனைவர் சு.ப. திண்ணப்பன், முன்னாள் நிலையத் மேற்பார்வையாளர் முனைவர் எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டியன் ஆகியோர் திருவாட்டி சாந்தியிடம் ஓர் இளம் வாழைக்கன்றை வழங்கினர்.

நிலையத்தின் புதிய தொடக்கத்தை அடையாளப்படுத்தும் இந்த வாழைக்கன்று, புதிய வளாகத்தில் அமையவுள்ள மூலிகைத் தோட்டத்தில் நடப்படும்.

பரிசளிப்பு விழா உள்ளரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளையில், வெளியரங்கில் மாணவர்களுக்கான தமிழ்த் திருவிழாவும் நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 40 கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 800 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் தமிழ்த் திருவிழாவில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான ஏறத்தாழ 800 மாணவர்கள் இவ்வாண்டு கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் தமிழ்த் திருவிழாவில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான ஏறத்தாழ 800 மாணவர்கள் இவ்வாண்டு கலந்துகொண்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களைப் பண்பாட்டுக் காவலர்களாக உருவாக்கும் நோக்கில் பாரம்பரியக் கலை வடிவங்கள் திருவிழாவில் பயிற்றுவிக்கப்பட்டன.

இவ்வாண்டு புதிதாக, மாணவர்களுக்குத் தேவராட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த இரண்டு நாடக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஓரங்க நாடகப் பட்டறைகளை நடத்தினர். சிலம்பாட்டம், கபடி, உரியடி, பறையாட்டம், சிக்காட்டம், கரகாட்டம், மான்கொம்பாட்டம் போன்ற கலைகளும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.

மற்றோர் அங்கத்தில். ‘நம் நிலையம், நம் பயணம்’ என்ற கருப்பொருளில் பாரம்பரிய நடன, நாடகக் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதில் மயிலாட்டம், ஒயிலாட்டம், பின்னல் கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல நாட்டுப்புறக் கலைகளை ஏகேடி கிரியேஷன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்த்தினர்.

குறிப்புச் சொற்கள்