தமிழ்த் தொண்டர்களைச் சிறப்பித்த ‘தமிழர் திருநாள்’ விழா

தமிழ்த் தொண்டர்களைச் சிறப்பித்த ‘தமிழர் திருநாள்’ விழா

2 mins read
0c44d4b3-868b-4b36-aecd-4fc38b6c1ced
நிகழ்ச்சி மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்குப் பாராட்டு. - படம்: மாதவி இலக்கிய மன்றம்
Google News Preferred Icon

தமிழ் உணர்வை இளையர்களுக்கு ஊட்டி, மொழியை வளர்த்த பெரியவர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாதவி இலக்கிய மன்றம் நடத்திய தமிழர் திருநாள் அமைந்துள்ளது.

46வது முறையாக நடத்தப்படுவதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை (மே 23) நடைபெற்றது.

சமூக அமைப்பினர், தமிழ் அமைப்பினர், பெரியவர்கள், மாணவர்கள் என அரங்கு நிறைந்த இந்நிகழ்ச்சியில் அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணியால் தொடங்கப்பட்ட தமிழர் திருநாளைத் தொடர்ந்து மாதவி இலக்கிய மன்றம் நடத்திவருவதைப் பெருமையாகக் குறிப்பிட்டு, மொழி, சமூகம் இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்படவிருப்பதாக மாதவி இலக்கிய மன்றத் தலைவர் சித்ரா மெய்யப்பன் குறிப்பிட்டார்.

தமிழை மொழியாக மட்டும் பார்க்காமல் பண்பாட்டு அடையாளமாகவும், சமூகத்தை இணைக்கும் உணர்வாகவும், தமிழார்வமுள்ள இளையர்களை உருவாக்கும் தளமாகவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் தளமாகவும் மாதவி இலக்கிய மன்றம் செயல்படவிருப்பதாக அவர் கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, ஷர்மிளா தீபன் இயக்கத்திலும் தீபன் கணேஷ் இசையமைப்பிலும் சிலப்பதிகார மாதவியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘மாதவி பொன் மயிலாள்’ இலக்கிய, இசை நாடகம் அரங்கேறியது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்நாடகத்தில் நடித்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர் ஜெகதீஸ்வரன் ராஜு, “மாணவர்களிடம் இலக்கியம் சென்று சேர்ந்திருப்பதைக் காண்கிறேன். இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்,” எனக் கூறினார்.

நிகழ்ச்சி நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகப் பாராட்டிய திரு தினகரன், மன்றத்தில் பெண்களின் பங்களிப்பையும் சுட்டினார்.

தமிழர் பேரவைத் தலைவர் வெ.பாண்டியன், அனைத்துத் தமிழ் அமைப்புத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் பொதுமக்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு செய்வது புதிதாகப் பொறுப்பேற்றுத் திறம்பட செயல்பட நினைக்கும் குழுவினருக்கு ஊக்கமளிக்கும் எனக் கூறிய அவர், தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு பவள விழாவைப் பற்றியும் அறிவித்தார்.

பின்னர், மன்னை க.இராஜகோபாலன் தலைமையில் முத்தமிழ்ச் சோலை அங்கம் நடைபெற்றது. ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் ஸ்வர்ணலதா ஆவுடையப்பனும், ‘இன்தமிழும் இன்னிசையும்’ என்ற தலைப்பில் மேனகா சேஷகுமாரும், ‘நற்றமிழும் நாடகமும்’ என்ற தலைப்பில் இராம்குமார் சந்தானமும் உரையாற்றினர்.

‘தமிழவேள் கோ சாரங்கபாணி’ விருது சிங்கப்பூரின் பிரபல முன்னோடி எழுத்தாளர் ம இளங்கண்ணனுக்கும், தன்னலமற்ற சேவை புரியும் பெண்ணுக்கான ‘மாதவி கண்ட மாதரசி’ விருது திருவாட்டி வீரம்மாளுக்கும் வழங்கப்பட்டன.

கடந்த மாதம் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்