லாவ் பா சாட்டின் 130வது ஆண்டு விழா

லாவ் பா சாட்டின் 130வது ஆண்டு விழா

3 mins read
3b07c45f-d62c-43cb-a5c8-465972a1b943
1970ஆம் ஆண்டுப் பழைய தெலுக் ஆயர் சந்தை. - படம்: ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

மத்திய வணிக வட்டாரத்தில் இயங்கும் புகழ்பெற்ற ‘லாவ் பா சாட்’ உணவு நிலையம் அதன் 130வது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. அதைக் குறிக்கும் வகையில், அதற்கான கொண்டாட்டங்கள் ஜூன் 27ஆம் தேதியன்று தொடங்குகின்றன.

மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் உணவு நிலையத்தின் பாரம்பரியமிக்க வரலாற்றைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் மரபுடைமைப் பாதை தொடங்கப்படும்.

உள்நாட்டுப் பாடகரும் பாடலாசிரியருமான டிக் லீ இயற்றிய பாடல்களும் அதில் இடம்பெறும்.

55,000 சதுர அடி எண்கோண வடிவிலான இந்த உணவு நிலையம் முன்பு தெலுக் ஆயர் சந்தை என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூர் உணவு வகைகளை உள்ளூர் மக்களும் சுற்றுப் பயணிகளும் ரசித்து உண்பதற்கு 80க்கும் மேற்பட்ட உணவகங்களை இது கொண்டுள்ளது.

2,500 பேர் உட்புறத்திலும் 1,200 பேர் வெளியிலும் அமர்ந்து உணவு உண்பதற்குத் தேவையான இருக்கை வசதிகளும் இந்த உணவு நிலையத்தில் உள்ளது. மேலும், வாடிக்கையாளர் அளவை அதிகரிக்கப் பல சீரமைப்பு திட்டங்களும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கப் பாடகர்களான டெய்லர் சுவிஃப்ட், புருனோ மார்ஸ் ஆகியோரின் அண்மைய இசை நிகழ்ச்சிகளின் காட்சிகளும் அத்துடன் தற்போது நடந்துகொண்டிருக்கும் யூரோ கிண்ணம் 2024 காற்பந்து போட்டிகளின் காட்சிகளும் இங்கு திரையிடப்பட்டன.

ஹாங்காங் நடிகை சார்மைன் ஷே, ஆங்கிலப் பாடகரும் பாடலாசிரியருமான எட் ஷீரன் உட்பட பல பிரபலங்கள் லாவ் பா சாட்டிற்கு (ஹொக்கியனில் “பழைய சந்தை” என்று பொருள்தரும்) வருகை தந்தனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக லாவ் பா சாட்டில் செயல்படும் பல குடும்பக் கடைகளும் உள்ளன.

லாவ் பா சாட்டின் பொற்காலங்கள்

1894: அப்போது, தெலுக் ஆயர் சந்தை என அழைக்கப்பட்டது. நான்கு ஆண்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, அதன் தற்போதைய ராஃபிள்ஸ் கீ தளத்தில் ஈரச் சந்தையாகத் திறக்கப்பட்டது. அப்போது நடந்த கட்டுமான பணியின்போது தான் அதன் மகுடமாகத் திகழும் மத்திய கடிகாரக் கோபுரம் பொருத்தப்பட்டது.

1972: தெலுக் ஆயர் சந்தையில் $650,000 மதிப்பில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த பிறகு உணவு நிலையமாக மீண்டும் திறக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெளியான அரசிதழில் இது தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1985 - 1989: பெருவிரைவு ரயில் நிலையத்திற்கான சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக உணவு நிலையக் கட்டடம் இடிக்கப்பட்டது. அப்போது, அங்குக் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் இடம்பெயர்ந்தனர். பின்னர், $6.8 மில்லியனுக்குச் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. தெலுக் ஆயர் சந்தை அதிகாரபூர்வமாக லாவ் பா சாட் எனப் பெயரிடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

1996: ‘சாத்தே ஸ்திரீட்’ அறிமுகமானது.

2014:  $4 மில்லியன் மதிப்பில் காற்றோட்டத்தை மேம்படுத்தவும் இருக்கை அளவை விரிவுபடுத்தவும் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

2019: ஃபேர் பிரஸ் குழுமம் லாவ் பா சாட்டை கையகப்படுத்தியது. ஓர் ஆண்டுக்குப் பிறகு, 7,000 சதுர அடி பரப்பளவில் சில்லறை விற்பனை இடம் அறிமுகமானது. இங்கு, உணவு மற்றும் உள்ளூர் நினைவுப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உணவகம்ஆண்டு விழா