சிங்கப்பூரின் தொன்மையான கத்தோலிக்க தேவாலயத்தில் இந்திய பாதிரியார்

சிங்கப்பூரின் தொன்மையான கத்தோலிக்க தேவாலயத்தில் இந்திய பாதிரியார்

2 mins read
85026d45-cd80-49c2-bf4d-3404818f0251
கத்தோலிக்க பாதிரியார் சேவியர் நத்தானியல். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ஆக தொன்மையான ‘த கதீட்ரல் ஆஃப் குட் ஷெப்ஹேர்ட்’ கத்தோலிக்க தேவாலயத்தில் தற்போது ஒரு பாதிரியாராகச் சேவை புரிந்து வருகிறார் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவாலய பாதிரியார் சேவியர் நத்தானியல், 47.

தேவாலயத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவிருக்கும் பிரார்த்தனை அமர்வுகளை இதர பாதிரியார்களுடன் முன் நின்று வழிநடத்தவிருக்கும் நத்தானியல், விசைப்பலகை கொண்டு இசை மழையில் வருவோரை நனைய வைக்கவுள்ளார்.

“தேவாலயத்துக்கு வருபவர்கள் பண்டிகை உணர்வில் மூழ்கி இங்கு நடக்கவிருக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவைச் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது,” என்றார் நத்தானியல்.

கடந்த ஈராண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கும் இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தனது பூர்வீக கிராமத்தில் கொண்டாடியதை நினைவுகூர்ந்தார்.

“எங்கள் கிராமத்தில் அனைவரும் ஒன்றுகூடி ஆடல்பாடலுடன் பண்டிகையை வரவேற்பார்கள். அது ஒரே குதூகலமாக இருக்கும்,” என்று கூறினார்.

சிங்கப்பூரில் பண்டிகையைக் கொண்டாடுவது அவருக்குப் புதுவித அனுபவமே.

கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நெடுகிலும் சிங்கப்பூர் மக்கள் இறைவனை நாடி ஆன்மிகத் தாகத்துடன் தவறாமல் தேவாலயத்துக்கு வருவதைப் பாராட்டினார் நத்தானியல்.

இறை பக்தி மிகுந்த கத்தோலிக்க பெற்றோருக்குப் பிறந்த நத்தானியல், ஒரு மருத்துவர் அல்லது ஒரு பொறியியலாளர் ஆவார் என்ற பெற்றோர் எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்டார்.

ஆனால், 18 வயதில் அவரின் சிந்தனை மாறியது. ஆன்மிகப் பாதையில் அடி எடுத்து வைக்க அவருக்கு உற்சாகம் பிறந்தது.

எட்டு ஆண்டுகள் இறையியல் கல்வி மேற்கொண்டபின் பாதிரியார் பயணத்தை மேற்கொண்டார்.

18 ஆண்டுகளாக பாதிரியாராக இருக்கும் இவர், “இது ஒரு முழுநேரத் தொழில் அல்ல. இது முழுமையான அர்ப்பணிப்பு. தியாகம் எனச் சொல்வதைவிட இதை நான் முழுமனதுடன் செய்கிறேன் என்று சொல்வதே பொருந்தும்,” எனக் கூறினார் நத்தானியல்.

“கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பையும் சமாதானத்தையும் குறிக்கிறது. இயேசுவுக்கு நன்றி செலுத்தி நாம் அனைவரும் அமைதியை நோக்கிச் செல்வோம்,” என்று புன்முறுவலுடன் கூறினார் நத்தானியல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்