பனிப்பாறையைப் போன்றவர்கள் மாணவர்கள்

பனிப்பாறையைப் போன்றவர்கள் மாணவர்கள்

2 mins read
3cb929bb-d218-4095-9535-edce3f8f0187
தொடக்கப்பள்ளிப் பிரிவில் நல்லாசிரியர் விருது பெற்ற திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி, 44. - படம்: பே.கார்த்திகேயன்
Google News Preferred Icon

“மாணவர்கள் கடலில் இருக்கும் பனிப்பாறையைப் போன்றவர்கள். மேலோட்டமாக அணுகினால் அவர்களுடைய முழுத்திறமை அறியப்படாது. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் கடமை,” என்று கூறினார் தொடக்கப்பள்ளிப் பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி, 44. 

இளம் பிள்ளைகளுக்கு வண்ண மணல், ‘ப்ளே-டோ’ போன்ற தொட்டுணரக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி இவர் பாடம் நடத்துகிறார். மாணவர்கள் வகுப்பில் கவனம் சிதறாமல் இருக்கக் கதை, பாடல் போன்ற கலையம்சங்கள் வழியாகவும் கற்பிக்கிறார் திருவாட்டி உஷா. 

நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் மூத்த ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், அப்பள்ளியின் சிறப்புக் கல்வியியல் தேவைகள் குழுவின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறார். ஆக்ககரமான வகுப்பறைக் கலாசாரத்தை மாணவர்கள் மத்தியில் பழக்குவது அவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்று இவர் தெரிவித்தார். 

“கல்வி என்பது மதிப்பெண் சார்ந்தது மட்டுமல்ல. பண்பு, பணிவு, அறிவு போன்ற சகலத்திலும் மேம்பட உதவும் வாழ்க்கை முறைமை,” என்று கூறினார் திருவாட்டி உஷா. அன்றாடம் மாணவர்களுக்குத் தான் கற்பிக்கும் தாரக மந்திரம் ‘என்னால் முடியும்’ என்றும் இளம் வயதில் விதைக்கப்படும் தன்னம்பிக்கையே எதிர்காலத்தில் அவர்கள் சுயமாக வாழ வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். 

23 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்த் துறையில் பணியாற்றி வரும் இவர், தன் பணிக்காலத்தில் தொடக்கநிலை ஆசிரியர், நடன ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பிள்ளைகளின் மனம் பூவைப் போன்று மிருதுவானது என்று கூறிய இவர், எளிதில் வடு ஏற்பட்டுவிடாமல் ஆக்ககரமான சூழலையே அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று வலியுத்தினார். 

ஆசிரியர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் விரைவில் அதிலிருந்து வெளிவந்து சுயமாக உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும் என்று தன் அனுபவம் மூலம் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி உஷா. 

அவ்வப்போது மாணவர்கள் தரும் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருள்கள் போன்ற அன்பின் வெளிப்பாடுகளே தான் வாழ்வில் ஈட்டிய பெரும் செல்வங்கள் என்று பெருமையுடன் கூறினார் இந்த ஆசிரியர். 

குறிப்புச் சொற்கள்