ஆசிரியரின் கற்பித்தல் முறை மாணவர்களால் நிர்ணயிக்கப்படவேண்டும்

ஆசிரியரின் கற்பித்தல் முறை மாணவர்களால் நிர்ணயிக்கப்படவேண்டும்

2 mins read
25e4c0ad-867d-4eb4-b0e7-15d962f1e459
தொடக்கப்பள்ளிப் பிரிவின்கீழ் நல்லாசிரியர் விருதைப் பெற்ற திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன், 44. - படம்: பே.கார்த்திகேயன்
Google News Preferred Icon

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு நாளும் கற்கவும் வேண்டும் என்று கூறுகிறார் தொடக்கநிலைப் பள்ளிப் பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன், 44. 

தமிழாசிரியர் பணியில் 19 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர், தன்னுடைய அன்றாட வகுப்புகளை ஆடல், பாடல், நாடகம் என மாணவர்களுக்குச் சுவாரசியமூட்டும் வகையில் நடத்த முயல்கிறார். பாடங்களுக்கு ஏற்ப தாமே பாடல்களை உருவாக்கியும் பிரபலமான திரையிசைப் பாடல்களில் பாடங்களின் கருத்துகளை இணைத்தும் நடத்தும் இவருடைய வகுப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. 

ஆசிரியரின் கற்பித்தல் முறை மாணவர்களின் தேவைகளையும் விருப்பத்தையும் பொறுத்தே அமைய வேண்டும் என்று கூறும் இவர், ஒவ்வொரு மாணவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்களின் கிரகிப்புத் திறனிற்கு ஏற்ப வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் உத்திமுறைகளைப் பயன்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார். 

குவோ சுவான் பிரெஸ்பிடேரியன் தொடக்கப்பள்ளியில் மூத்த ஆசிரியராகப் பணிபுரியும் இவர், மாணவர்களின் நம்பிக்கையைக் பெறுதல் ஓர் ஆசிரியரின் தலையாய பொறுப்புகளில் ஒன்று என்றும் சொன்னார். ஒவ்வொரு மாணவரின் தனித்திறன்களை ஆராய்வதில் தான் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதாலேயே மாணவர்கள் தன்னுடன் மிகுந்த உரிமையுடனும் நட்புணர்வுடனும் பழகுகிறார்கள் என்றார் இவர்.  

இவர் தமிழ் இலக்கணத்தையும் நடைமுறைச் சூழல் சான்றுகளைப் பயன்படுத்திக் கற்றுக்கொடுக்கிறார். ஒரு மூத்த ஆசிரியராகப் பள்ளியின் சக ஆசிரியர்களுடன் சிறந்த கற்பித்தல் வழிமுறைகளையும் இவர் பகிர்ந்து வருகிறார். 

19 வயதிலேயே இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் கணவரின் உந்துதலாலும் குடும்பத்தினரின் ஆதரவினாலுமே படித்து ஆசிரியரானதாகத் தெரிவித்தார் திருவாட்டி ஹருன்னிஷா. 

இவ்விருது கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட இவர், தன்னுடைய மாணவர்களின் ஒவ்வொரு முன்னேற்றமும் தனக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஆகப்பெரிய விருது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்