ஊழியர்கள் துறைதாண்டி பழகக் கைகொடுத்தது காற்பந்து

ஊழியர்கள் துறைதாண்டி பழகக் கைகொடுத்தது காற்பந்து

2 mins read
d1d21d44-756f-4eda-a45f-f43ca21ebce2
பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து பழகி, பிணைப்பு ஏற்படுத்திக்கொள்ள உதவியது ‘ஃபுட்பால் ஃபியெஸ்டா 2026’ காற்பந்துப் போட்டி. - படம்: கிறிஸ்டோ லியோன்
multi-img1 of 2
Google News Preferred Icon

வெவ்வேறு துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பேசிப் பழகி, தொடர்புகளை வலுப்படுத்தத் தளம் அமைத்துத் தந்தது எஸ்பிஎச் மீடியா அண்மையில் ஏற்பாடு செய்த ‘ஃபுட்பால் ஃபியெஸ்டா 2026’ காற்பந்துப் போட்டி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7), லயன் சிட்டி செய்லர்ஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற அந்தப் போட்டியில் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி, போக்குவரத்து, சமூகநலம் ஆகிய துறைகளில் இயங்கும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 1 மணியளவில் தொடங்கிய காற்பந்துப் போட்டியில் ஐந்து பேர் கொண்ட குழுக்களில் ஊழியர்கள் விறுவிறுப்பாகக் களமிறங்கினர்.

ஐந்து சுற்றுகளில் 18 குழுக்கள் பங்கேற்றன. சிங்கப்பூரில் உள்ள மெக்சிகோ, கனடா தூதரகங்களைச் சேர்ந்த அணிகளும் காற்பந்தாட்டத்தில் பங்கேற்றன. 

உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகளை இவ்வாண்டு மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்றுநடத்துவதை முன்னிட்டு அந்தக் குழுக்கள் போட்டியில் அங்கம் வகித்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த அணி, எஸ்எம்ஆர்டி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பொழுதுபோக்குக்காகக் காற்பந்தாட்டம் விளையாடும் 38 வயது முகம்மது ஃபசாயிலுக்கு இந்த வெற்றி பெருமகிழ்ச்சி அளித்தது.

“பிற சிங்கப்பூர் நிறுவனங்களுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பைக் கண்டறிய இந்த நிகழ்ச்சி உதவியது,” என்றார் அறிவியல் நிலையத்தின் விருந்தினர் அனுபவ உதவி மேலாளராகப் பணியாற்றும் முகம்மது ஃபசாயில்.

“மெக்சிகோவில் பூங்காக்கள், தெருக்கள், பள்ளிக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் காற்பந்து விளையாடப்படுகிறது. வயது, திறமை வேறுபாடின்றி அனைவராலும் ரசிக்கப்படும் விளையாட்டு அது,” என்றார் சிங்கபூருக்கான மெக்சிகோ தூதர் அகஸ்டின் கார்சியா-லோபஸ் லோயிசா.

எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட்,  “வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களை இணைப்பதில் காற்பந்தாட்டத்துக்கு ஒரு தனித்துவம் உண்டு,” என்றார்.

காற்பந்தாட்டப் போட்டியை அடுத்து ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர்.

அதிர்ஷ்டக் குலுக்கல், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

காற்பந்தாட்டப் போட்டியின் மூலம் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து பேசிப் பழகுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. ஊழியர்களும் தங்கள் குடும்பத்துடனும் ஞாயிற்றுக்கிழமைப் பொழுதை இனிமையாகக் கழித்தனர்.

“பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டேன்,” என்றார் குவோக் குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் ராவ்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துதிடல்தடப் போட்டிகள்போட்டி