பாடலும் அதன் கதையும்: மாறுபட்ட இசை நிகழ்ச்சி

பாடலும் அதன் கதையும்: மாறுபட்ட இசை நிகழ்ச்சி

1 mins read
65223275-b4da-4a2c-a01f-bb3c8e727e41
ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறவுள்ள ‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ நிகழ்ச்சியின் இசைக் குழுவினர். - படம்: ஏற்பாட்டுக் குழு
Google News Preferred Icon

புகழ்பெற்ற பாடகர்கள் சைந்தவி, ஹரிசரண், ஸ்ரீவர்த்தினி, சந்தோ‌ஷ் சுப்பிரமணியன் முதலிய இசைக்கலைஞர்களுடன் உள்ளூர்க் கலைஞர்கள் திரிபுரசுந்தரி, லாவண்யா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ள இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ எனும் அந்நிகழ்ச்சி ஏப்ரல் 5ஆம் தேதி எஸ்பிளனேட்டில் உள்ள சிங்டெல் நீர்முகப்பு அரங்கில் நடைபெறவுள்ளது.

இசைக்கலைஞர் சுபஸ்ரீ தணிகாசலத்தின் தலைமையில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், ஏறத்தாழ 21 இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்த 3 மணிநேர நிகழ்ச்சியில், 1960கள் முதல் அண்மைக் காலம்வரை வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இடம்பெறும்.

இசைக்கு அப்பால் அவ்வப்போது சுவாரசியமான தகவல்களுடன் அமையவுள்ளது நிகழ்ச்சி.

நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ‘பர்ப்பள் ஆரா’ எனும் உள்ளூர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி, சிறந்த அனுபவமாக இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள இசைக்கலைஞர்களை மெய்நிகர் வழி ஒன்றிணைத்துக் காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களை அதன் பின்னணிக் கதைகளுடன் கோத்து வழங்கி இணைய உலகில் பிரபலமானவர் சுபஸ்ரீ தணிகாசலம்.

‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ எனும் அந்தக் காணொளித் தொடரில் ஏறத்தாழ 700 காணொளிகளை வெளியிட்டு இசைப்பிரியர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில், ஓர் இசைக்குழுவாக இவர்கள் உலகெங்கிலும் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்