ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘சிங்கப்பூர் சிறப்பு நாள்’

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘சிங்கப்பூர் சிறப்பு நாள்’

2 mins read
8c6789ab-a44f-4939-b6e2-07e28f9b62c4
ஈரோடு புத்தகத் திருவிழாவின் ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்னும் சிறப்புக் கூடத்தில் தமிழ் நூல்கள் இடம்பெறவுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ‘சிங்கப்பூர் சிறப்பு நாள்’ கொண்டாடப்படவுள்ளது.

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 12 நாள்களுக்குப் புத்தகத் திருவிழா நடைபெறும். 

அயலகத் தமிழ்ப் படைப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கென ஒரு நாளை ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று அந்நிகழ்ச்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். 

சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளதால் அந்தப் புதிய திட்டத்தைச் சிங்கப்பூருடன் சேர்ந்து தொடங்க முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். 

ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை முற்றிலும் சிங்கப்பூர் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம், கலந்துரையாடல்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்கள் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் இடம்பெறும். 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமையவுள்ள ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்னும் சிறப்புக் கூடத்தில் இந்தியாவைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளிலுள்ள தமிழ் நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். 

உலகத் தமிழர் படைப்பரங்கில் சிங்கப்பூர் படைப்பாளர்களின் நூல்கள் தனித்த முக்கியத்துவத்துடன் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆழ்ந்து படித்திருக்கும் மூன்று சிறந்த வாசகர்கள் தேர்வு செய்யப்பட்டு அன்றைய நிகழ்வில் பரிசளிக்கப்படவுள்ளனர்.

சிங்கப்பூர் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், மக்கள் சிந்தனைப் பேரவைக்கு வழங்கியுள்ள ரூபாய் ஒரு லட்சம் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் தொகை மூலமே அப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க மக்கள் சிந்தனைப் பேரவை பல்வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியே ‘சிங்கப்பூர் சிறப்பு நாள்’ நிகழ்வாகும்.

அடுத்தடுத்த ஆண்டுகள் மலேசியா, இலங்கை என்று அடுத்தடுத்த நாடுகளின் சிறப்பு நாள்களாகக் கடைபிடிக்கப்படவுள்ளன.

சில ஆண்டுகளுக்குமுன் முதன்முதலில் அந்தப் படைப்பரங்கம், ‘தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழ்ப் படைப்பரங்கம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இவ்வாண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்ச்சிகளைப் படைக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, தாரகை முத்தமிழ்க் கழகம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆகிய அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன. கலந்துகொள்ள விரும்புவோர்க்கு உரிய ஏற்பாடுகளைச் செய்துதரவும் அவ்வமைப்புகள் முனைந்துள்ளன.

தாங்கள் எழுதிய நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க விரும்புவோர் தாங்கள் வெளியிட்ட நூல்களில் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று படிகளை எண் 24, அப்பர் டிக்சன் சாலையிலுள்ள ‘ஆர்யா கிரியேஷன்ஸ்’ கடையில் ஜூலை 10ஆம் தேதிக்குள் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஆர்வமுள்ளோர் திரு நா.ஆண்டியப்பன் (8500 9105), கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (8131 6437), திருவாட்டி மஹ்ஜபீன் (9126 0404), திரு இறை. மதியழகன் (9853 6465) ஆகியோரை அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்