வீரவிளையாட்டை இளையர்களிடம் தக்கவைக்க களம்கண்ட சிலம்பம்

வீரவிளையாட்டை இளையர்களிடம் தக்கவைக்க களம்கண்ட சிலம்பம்

2 mins read
தமிழ்மொழி விழாவில் தமிழர் தற்காப்புக் கலை
159e26ea-eab6-4be3-94f8-252dc79e91e3
சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்ட இளையர்கள். - படம்: வடிவேல் பவித்ரா
Google News Preferred Icon

ஆர்த்தி நாச்சம்மை

வீர விளையாட்டான சிலம்பத்தை இந்திய சமூகத்தினரிடையே கொண்டுசேர்க்கும் இலக்குடன் களரிப் பயிற்சிக் கழகம் (களரி அகாடமி) ஏற்பாடு செய்திருந்த ‘சிலம்பமும் திரைப்படமும்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.

திரைப்படம் மூலம் சிலம்பப் பயிற்சி.
திரைப்படம் மூலம் சிலம்பப் பயிற்சி. - படம்: வடிவேல் பவித்ரா

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு நடந்தேறிய அந்நிகழ்ச்சியில் இளையர்களுக்கான பயிலரங்கும் நடத்தப்பட்டது.

பயிலரங்கின் ஓர் அங்கமாக, சிலம்பக் கலை பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு தற்காப்பின் நுட்பங்கள், அடிப்படை பாவனைகள் உள்ளிட்டவற்றை கற்றுகொடுத்தனர்.

பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் சிலம்பம் ஒன்று வழங்கப்பட்டது. அவர்களுக்கு வெட்டு, அடவு, மேல் வீச்சு போன்ற சிலம்பாட்டத்தின் அடிப்படை அசைவுகள் கற்றுகொடுக்கப்பட்டன.

கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பயிலரங்கில் கலந்துகொண்டனர். சிலம்பக்கலையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்ட வேதகிரி, 15 ஆண்டு அனுபவமுள்ள ரூபன் ஆகியோரால் 2015ஆம் ஆண்டு களரி பயிற்சிக் கழகம் (களரி அகாடமி) நிறுவப்பட்டது.

தமிழர் பெருமைகூறும் அக்கலையைச் சமூகத்தினரிடையே அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த மூன்றாண்டுகளாக களரிப் பயிற்சிக் கழகம் தமிழ்மொழி விழாவில் பங்கேற்று வருகிறது.

“இளையர்களுக்கு மேலும் சிறப்பான வகையில் ஆர்வத்தைத் தூண்டிட இம்முறை தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சிலம்பக் கலையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்,” என்றார் களரிப் பயிற்சிக் கழகத்தின் நிறுவனர் வேதகிரி கோவிந்தசாமி

‘‘சிலம்பத்தின் வரலாறு உள்ளிட்ட சில எளிமையான பாவனைகளையும் இந்த பயிலரங்கில் கற்றுக்கொடுத்தோம். சிலம்பக் கலையை இளையர்களிடம் அறிமுகப்படுத்தி அதை வாழ வைப்பதே எங்கள் முக்கிய நோக்கம்,’’ என்று அவர் தெரிவித்தார்.

“சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலைகளைமீது எனக்கு மிகுந்த ஆர்வம். பயிற்றுவிப்பாளராக இருக்க மிகவும் பொறுமை வேண்டும். மற்றவர்களுக்கு அக்கலையைக் கற்றுக்கொடுப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது,’’ என்று சொன்னார் அக்கழகத்தில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிவரும் திரு பாலன் ஆறுமுகம், 35.

உடற்பயிற்சி பயிற்சியாளருமான அவர், ‘‘இளையர்கள் தங்களின் கலாசாரத்தையும் மரபையும் மறந்துவிடாமல் அதைக் கட்டிக் காத்து வாழவைக்க வேண்டும் என்பதே என் ஆசை,’’ என்று கூறினார்.

“எனக்குச் சிறு வயதிலிருந்து சிலம்பத்தின்மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால், அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபோன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுகொள்வதில் நிறைய பயன்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒழுக்கம், கவனம், உடல் நெகிழ்வு ஆகியவை மேம்படும். என் மகனுக்கு சிலம்பத்தை அறிமுகப்படுத்தவும் அவனுக்கு ஊக்கமளிக்கவும் பயிலரங்கிற்கு அழைத்துவந்தேன்,” என்று தெரிவித்தார் பயிலரங்கில் கலந்துகொண்ட இல்லத்தரசியான ஹரிபிரபா மணிகண்டன், 37.

சிலம்பப் பயிற்சியினால் தமக்குக் கிடைத்த நன்மையைப் பற்றி குறிப்பிட்ட நவீனன் கார்த்திகேயன் 14, “நான் மூன்று ஆண்டுகளாகச் சிலம்பம் கற்றுவருகிறேன். அது என் உடலை நலமாக வைத்துக்கொள்ள உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்