மகளின் சிரிப்பும் சிணுங்கலும்: பிள்ளை வளர்ப்பில் பூரிக்கும் தந்தை

மகளின் சிரிப்பும் சிணுங்கலும்: பிள்ளை வளர்ப்பில் பூரிக்கும் தந்தை

3 mins read
5c42a5e8-4534-4d36-87c3-da80e44a1cfb
மகளை வளர்த்ததைப் பெரும் பேறாகக் கருதும் தந்தை ஷாஹித் இம்தாதுல்லா. - படம்: ஷாஹித் இம்தாதுல்லா
Google News Preferred Icon

எந்தச் செல்வத்துக்கும் ஈடில்லாத் தன் செல்ல மகள் கண் திறந்ததிலிருந்து கூடவே இருந்து கவனிப்பதைப் பெரும்பேறாகக் கருதுகிறார் 38 வயது ஷாஹித் இம்தாதுல்லா.

தந்தையர் விடுப்பு இல்லாதிருந்தால் மகள் மிஷ்கா, சிரிப்பதையும் சிணுங்குவதையும், பாலுக்கு அழுவதையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு வாழ்நாளில் கிடைத்திருக்காது என்றார் அவர். 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மகள் வளர்வதைப் பார்த்துப் பூரிக்கும் இந்தத் தந்தை, சிங்கப்பூரில் வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய ஒரு மாதத் தந்தையர் விடுப்பு, 10 வாரப் பெற்றோர் விடுப்பு ஆகியவற்றால் பயன்பெற்றவர்களில் ஒருவர்.

இவரைப்போலவே, பிள்ளை வளர்க்க பெற்றோர் விடுப்பைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 47 விழுக்காடாக இருந்தது, தற்போது 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது. குடும்பங்களின் போக்குகள் குறித்துச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை சுட்டியது.

தனியார் துறையில் பணிபுரியும் ஷாஹித்தின் 35 வயது மனைவி அர்ச்சனா ஜெயராமனால் பெற்றோர் விடுப்பை முழுமையாக எடுக்கமுடியவில்லை.

அதனால் சேயுடன் தாயையும் பராமரிக்கும் நல்வாய்ப்பு தமக்கு அமைந்ததாக மென்பொருள் துறையில் பணியாற்றும் ஷாஹித் கூறினார்,

பிரசவத்தின்போது அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்பினால், மூன்று வாரங்கள் அவர் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஷாஹித்துக்குக் கிடைத்த இரண்டு மாதத் தொடர் விடுப்பு அன்புக்குரியோரின் நலன்காக்க பெரிதும் கைகொடுத்தது. 

“மனைவியை ஒருபுறம் கவனித்துக்கொண்டே குழந்தையின் அழுகைக்கான காரணங்களையும் புரிந்துகொண்டு, மகளுக்கு உணவளிப்பது முதல் தூங்க வைப்பதுவரை அனைத்தையும் கவனித்துக்கொண்டேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது,’’ என நெகிழ்ச்சியுடன் கூறினார் ஷாஹித்.

குறிப்பாக, தந்தையர் விடுப்பு சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தாம் பணியாற்றும் நிறுவனமும் உதவியதாகவும் திரு ஷாஹித் தெரிவித்தார். 

‘‘சிறுவயதில் இருந்து தந்தையர் அவர்களது வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஆனால் வருமானத்திற்கு இடையூறு இல்லாமல் கிடைக்கும் இத்தகைய  தொடர் விடுப்பால், மகளின் முதல் புன்னகை, சுற்று வட்டத்தில் கேட்கும் ஒலிகளுக்கு அவள் காட்டிய வெவ்வேறு முகபாவம், எழுப்பிய சத்தம் என ஒவ்வொன்றையும் என்னால் அருகில் இருந்தவாறே ரசிக்க முடிந்தது. 

அதுவே தன் மனைவி, குழந்தைக்குக் கிடைக்கும் உணர்வுபூர்வமான பாதுகாப்பு என்று கருதுவதாக ஷாஹித்  தெரிவித்தார்.

அரசாங்கக் கொள்கைகள் ஒருபுறம் உதவினாலும், நிறுவனங்களின் வேலைக் கலாசாரமும் இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். 

‘‘தனியார் துறை ஊழியராக இருந்தாலும் விடுப்பில் இருந்தபோது, வீட்டிலிருந்தவாறே மேற்கொள்ள அலுவலக மின்னஞ்சல்களோ வேறு பணியோ அளிக்கப்படவில்லை. அதனால் விடுப்பை எந்தவோர் இடையூறுமின்றி முழுமையாகக் குடும்பத்துடன் செலவிட பணியிடம் அனுமதித்தது,’’ என்று ஷாஹித் தெரிவித்தார்.

கூடுதல் நாள்களுடன் வழங்கப்பட்டிருக்கும் தந்தையர் விடுப்பும் பெற்றோர் விடுப்பும் பிள்ளைப் பராமரிப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது பெற்றோர் இருவரும் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், நீக்குப்போக்கான வேலைமுறை  மூலமும், குடும்பத்தாரின் ஆதரவோடும் மிஷ்காவை அன்போடு வளர்த்து வருகின்றனர் இந்த இணையர்.

அரசாங்கம் வழங்கும் சம்பளத்துடன் கூடிய தந்தையருக்கான விடுப்பைப் பயன்படுத்தியவர்களின் விகிதம் உயர்ந்துள்ள நிலையில், தாய்மார்களுக்கான மகப்பேற்று விடுப்பை எடுப்போர் விகிதமும் 74 விழுக்காடு முதல் 79 விழுக்காடு வரை எப்போதும்போல் மிக உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.

மேலும் சிங்கப்பூர்வாசிகளில் கடந்த ஆண்டு, முதல் முறை தந்தையானவர்களின் சராசரி வயது, 2015ல் இருந்த 32.9 வயதிலிருந்து 33.8 வயதாக அதிகரித்துள்ளது.

அதேபோல், முதல் முறை தாயானவர்களின் சராசரி வயது, 2015ல் இருந்த 30.5 வயதிலிருந்து 32.1 வயதாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்