ராயல் கிங்ஸ் சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருது

ராயல் கிங்ஸ் சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருது

2 mins read
b89755bc-8d2f-4506-af28-637e4067be8e
ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிராஜுதீன் (வலமிருந்து இரண்டாமவர்),  சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழிற்சபையின் தலைவர் அப்துல் மாலிக்கிடமிருந்து விருது பெறுகிறார்.  - படம்: தாரகை முத்தமிழ்க் கழகம்
Google News Preferred Icon

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைத் தழுவிய ‘மீலாதுன் நபி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் நடந்தேறியது.

தாரகை முத்தமிழ்க் கழகத்தின் ஏற்பாட்டில் அந்தப் படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கத்தில் மீண்டும் திரையிடப்பட்டது.

சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதைச் சிறப்பு விருந்தினரும் சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழிற்சபையின் தலைவருமான முனைவர் அப்துல் மாலிக் வழங்கி கௌரவித்தார்.

“எனக்குத் தமிழ் தெரியாது என்றாலும் துணைவாசகங்களின் உதவியுடன் படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் மலாய் மொழியில் வெளிவர வேண்டும்; அதற்கான உதவிகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,” என்று முனைவர் அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.

விருது பெற்ற திரு சிராஜுதீன், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் சமூகத்திற்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற கொள்கை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இயக்குநர் மில்லத் அகமதுக்கு ஆவணப்படத்திற்கான விருது ஒன்றும் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.

“அப்படம் பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக, சிங்கப்பூரில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை எனது உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன், “இது நல்ல படைப்பு. இதில் இயக்குநரின் உழைப்பைக் காண முடிகிறது,” என்று பாராட்டினார்.

எழுத்தாளர் ரமா சங்கரன் கூறுகையில், “இது பொழுதுபோக்குப் படம் அல்ல; கலாசார, ஆன்மிகப் படைப்பு. நான் தேடிய வினாக்களுக்கு இந்தப் படம் விடையளித்துள்ளது,” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாகத் தாரகை முத்தமிழ்க் கழகத்தின் தலைவர் திருவாட்டி மஹ்ஜபீன், “பார்வையாளர்களின் பாராட்டுகளே இந்தத் திரையிடலின் வெற்றியை உணர்த்துகின்றன,” எனக் குறிப்பிட்டார்.

வரும் ஜூன் 16ல் ‘மீலாதுன் நபி’ ஆவணப்படம், கோலாலம்பூரில் திரையிடப்படும் என்றும் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்கலைவிருது