சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உணவகங்களின் நற்செயல்

சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உணவகங்களின் நற்செயல்

2 mins read
b9f5259e-517d-4336-a66f-a5606d913441
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உணவகங்களின் நற்செயல். - படம்: தமிழ் முரசு
Google News Preferred Icon

புனித ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி என்பது உணவு மட்டுமன்று; அது அன்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.

பள்ளிவாசல்கள் மட்டுமன்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களும் நோன்புக் கஞ்சி தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி, சமூக நல்லிணக்கத்தை மெருகேற்றி வருகின்றன.

‘மிஸ்டர் பிரியாணி’ கடை உரிமையாளர் கோவிந்தராஜன், ஒரு மலாய் வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, நோன்புக் கஞ்சி தயாரிப்பதாகக் கூறினார்.

“முதியவர்களுக்காகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காகவும் வாரத்தில் மூன்று நாள்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) நாங்கள் நோன்புக் கஞ்சியைத் தயாரித்து அந்த வாடிக்கையாளரிடம் கொடுத்தோம். அவர் கஞ்சிப் பொட்டலங்களைக் குடியிருப்புப் பேட்டைகளுக்குச் சென்று விநியோகித்துள்ளார். இந்த நோன்புக் கஞ்சி விநியோகத்தை ஒரு கூட்டு முயற்சி என்று கூறலாம். நோன்பு மாதத்தில் சமூகத்தோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்குப் பெரும் மனநிறைவைத் தருகிறது,” என்றார் அவர்.

நோன்புக் கஞ்சிப் பொட்டலங்கள்.
நோன்புக் கஞ்சிப் பொட்டலங்கள். - படம்: கோவிந்தராஜன்
குடியிருப்புப் பேட்டையில் நோன்புக் கஞ்சி விநியோகம்.
குடியிருப்புப் பேட்டையில் நோன்புக் கஞ்சி விநியோகம். - படம்: கோவிந்தராஜன்

கஞ்சி கிடைக்காத பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்காக நோன்புக் கஞ்சி விநியோகத்தைத் தொடங்கினர், மரின் பரேட் பகுதியில் அமைந்துள்ள ‘சிக்கந்தர் பிரியாணி’ உணவகத்தினர்.

உணவக உரிமையாளர் பாத்திமா, “எங்கள் பகுதியில் நோன்புக் கஞ்சி வழங்குவதற்கு, அருகில் பள்ளிவாசல்கள் ஏதும் இல்லை. அதனால், இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் நாங்கள் நோன்புக் கஞ்சி வழங்கத் தீர்மானித்தோம். தினசரி 5 கிலோ அரிசியைப் பயன்படுத்தி, சுமார் 100 பொட்டலங்கள் கஞ்சி தயாரித்து 100 பேருக்கு இலவசமாக விநியோகிக்கிறோம்,” என்றார்.

டல்ஹௌசி லேனில் அமைந்துள்ள ‘பரக்கத்’ உணவகத்தின் உரிமையாளர் மு.அ.மசூது, “அன்றாடம் பலர் இந்த விநியோகத்திற்கு நிதி ஆதரவு அளிக்கிறார்கள். 500 பொட்டலங்கள் நோன்புக் கஞ்சியைத் தயாரித்து, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உணவுடன் தொண்டூழியர்கள் மூலம் வழங்குகிறோம். மேலும், உணவகத்திற்கு நேரில் வருபவர்களுக்கும் கஞ்சி இலவசமாக வழங்கப்படுகிறது,” என்று கூறினார்.

நோன்புக் கஞ்சி தயாரிக்கும் சமையல் கலைஞர்.
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் சமையல் கலைஞர். - படங்கள்: தமிழ் முரசு

சில உணவகங்கள் மிகப்பரந்த அளவில் நோன்புக் கஞ்சி தயாரித்து வருகின்றன. போர்ட்டோ நோவா உணவகத்தின் தொழில் வளர்ச்சி மேலாளர் ஸாஹாஅலி கூறுகையில், “அன்றாடம் ஏறத்தாழ 2,500 பொட்டலங்கள் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இவை பல பள்ளிவாசல்களுடன் அல்லது கடைகளுடன் உள்ள ஒப்பந்த விற்பனை அல்லது வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன,” என்றார்.

நோன்புக் கஞ்சிப் பொட்டலங்கள்.
நோன்புக் கஞ்சிப் பொட்டலங்கள். - படம்:தமிழ் முரசு

இன, சமயப் பாகுபாடின்றி அனைவரும் இந்தக் கஞ்சியைப் பகிர்ந்து கொள்வது சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகிறது. வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதும் பிறருக்குக் கொடுத்து மகிழ்வதும் ரமலான் மாதத்தின் உயரிய நோக்கமாகும். இந்த உணவகங்களின் முயற்சி, அந்த நோக்கத்தை மிகச் சரியாகச் சென்றடைகிறது.

குறிப்புச் சொற்கள்
சமய நல்லிணக்கம்உணவுசிங்கப்பூர்