உரையாடலால் உறவுகள் உருவாகும்: துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்

உரையாடலால் உறவுகள் உருவாகும்: துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்

2 mins read
a04c9a8f-64de-4f0d-8c3d-9024265ff9dd
சமயங்களுக்கு இடையிலான அமைப்பின் முதலாவது சமய நல்லிணக்க மாநாட்டில் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் நெஞ்சில் நின்ற தருணங்களைப் பகிர்ந்துகொண்டார். - படம்: தினேஷ் வாசு தாஸ் ஃபேஸ்புக் பக்கம்
Google News Preferred Icon

பிளவுகளும் நிலையின்மையும் பெருகியுள்ள அனைத்துலகச் சூழலில், சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் தற்செயலாக உருவாகவில்லை என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நல்லிணக்கம், வலுவான அமைப்புகள் மற்றும் பொறுப்பான தலைவர்களின் முயற்சிகளால் உருவானது என்பதை அவர் வலியுறுத்தினார். 

‘ஐஆர்ஓ’ எனப்படும் சமயங்களுக்கு இடையிலான அமைப்பின் முதலாவது சமய நல்லிணக்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு தினே‌‌ஷ் அவ்வாறு குறிப்பிட்டார். 

‘அமைதியில் வேரூன்றி: பிளவுபட்ட உலகில் சிங்கப்பூரின் சமயச் சமூகங்கள்’ (Anchored in Peace: Singapore’s Faith Communities in a Fractured World) என்ற கருப்பொருளில் அமைந்த அந்த மாநாடு, சனிக்கிழமை (மே 30) காலை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் நீ ஆன் கொங்சி அரங்கில் நடைபெற்றது.

டிரினிட்டி சமயக் கல்லூரிப் பேராசிரியர் ரோலண்ட் சியா, சிங்கப்பூரின் முன்னாள் துணை முஃப்தியாக இருந்த உஸ்தாஸ் முகமது ஹனான் ஹசான், இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் க. செங்குட்டுவன் ஆகியோர் மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் அங்கம் வகித்தனர்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரியாகத் தாம் பொறுப்பேற்றபோது, ‘ஐஆர்ஓ’ நடத்திய ஆசி நவில்தலுக்கான பலசமயச் சடங்கு குறித்த தமது நினைவுகளை துணையமைச்சர் தினே‌ஷ் தமது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துகொண்டார்.  

நெஞ்சில் நின்ற அந்தத் தருணம், தமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் திரு தினே‌ஷ் குறிப்பிட்டார்.

சமூகங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் அன்றாடத் தொடர்புகள் மூலமாகவே சிங்கப்பூரில் அமைதி நிலைநாட்டப்படுகிறது. அடுத்த தலைமுறைத் தலைவர்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

அமைதியும் இணக்கமும் சிங்கப்பூரின் அடிப்படைச் செயல்பாட்டுக் கொள்கையாக எவ்வாறு திகழ்கின்றன என்பதை அந்த மாநாடு ஆராய்ந்தது. 

சமயச் சமூகங்கள் பிளவுகளைத் தவிர்த்து, உரையாடல்களில் ஈடுபட்டு, பொது நன்மைக்காக எப்படி பொறுப்பேற்கலாம் என்பது குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற முகம்மது ராகிப் ஹசான், தமது சமூக வலைத்தளப் பதிவில், “வெவ்வேறு சமயங்களுக்கிடையிலான மரியாதை, புரிதல், ஒற்றுமை ஆகியவையே இணக்கமான சமூகத்தின் அடித்தளம் என்பதை இந்த மாநாடு நினைவூட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.

அமைதி, உரையாடல், சமூக ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தப் பல்வேறு சமயத் தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்ததைக் கண்டது ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்துலகக் குழப்பங்கள் சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைக் குலைக்க அனுமதிக்கக் கூடாது என்று திரு செங்குட்டுவன் வலியுறுத்தினார்.

“இன, சமய விவகாரங்கள் உணர்ச்சிகரமான கொந்தளிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

‘ஐஆர்ஓ’ அமைப்பின் புதிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள திரு செங்குட்டுவன், “எந்த ஒரு சமூகத்தின்மீதும் வைக்கப்படும் இழிவான கருத்து, அனைத்துச் சமூகங்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும்,” என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்