சிங்கப்பூர் ரசிகர்களுக்குக் களிப்பூட்டிய ராஜஸ்தானின் ‘கல்பேலியா’ நடனம்

சிங்கப்பூர் ரசிகர்களுக்குக் களிப்பூட்டிய ராஜஸ்தானின் ‘கல்பேலியா’ நடனம்

2 mins read
இந்திய மரபைக் காக்கும் ‘நம் மரபு’ தொடரில் முதன்முறையாகக் ‘கல்பேலியா
a0856667-a6fa-4a18-b45d-2dfd3efa8e3d
‘கல்பேலியா’ நடனக் கலையில் ஈடுபட்ட பங்கேற்பாளர்கள். - படம்: ஆட்டம்
Google News Preferred Icon

இன்றைய சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையில், ராஜஸ்தானின் புகழ்பெற்ற ‘கல்பேலியா’ நடனக் கலையை நேரில் பார்க்கும் வாய்ப்பு சிங்கப்பூரர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.

ஆயினும், மே 10ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்திற்குச் சென்றவர்களுக்கு அத்தகைய அரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிக்குச் சென்றதைப் போன்றதோர் அனுபவத்தை அவர்கள் பெற்றனர்.

சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஆனந்தா மரபுக்கலைகள் கூடம் (ஆட்டம்), இந்திய மரபுடைமை நிலையத்துடன் இணைந்து நான்காம் ஆண்டாக ‘நம் மரபு’ தொடரை நடத்தியது.

தொடரில் முதன்முறையாக, ‘யுனெஸ்கோ’ அமைப்பின் உலகப் பாரம்பரியக் கலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்தானின் புகழ்வாய்ந்த ‘கல்பேலியா’ நடனக் கலை அரங்கேற்றப்பட்டது.

வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தால் 1970களில் பாரம்பரிய மகுடித் தொழிலை இழந்த ‘சபேரா’ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கியதே ‘கல்பேலியா’ நடனம்.

ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்தக் கலைவடிவத்தைக் கண்டுகளித்தனர்.

உலகப் புகழ்பெற்ற ‘கல்பேலியா’ கலைஞர் சனானா கல்பேலியா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெய்சல்மேரைச் சேர்ந்த குன்சார் நாட்டுப்புற இசை நிறுவனத்தின் மரபிசைக்குழு மீட்டிய நேரடி இசை நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

“அழிந்துவரும் கலைகள் தொடர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தில், ‘ஆட்டம்’ குழுவினர் எடுக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை,” என்றார் குன்சார் நிறுவனத்தின் தலைவர் பாக்ஸ் கான்.

‘நம் மரபு’ தொடரின் ஒரு பகுதியாக 13 இடங்களில் நடைபெற்ற பயிலரங்குகளில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

“ஏறக்குறைய 30 கிலோ எடையுள்ள பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு, மிக நளினமாக ஆடிய சனானாவின் திறமை எங்களை வியக்கவைத்தது,” என்று டமாய் உயர்நிலைப்பள்ளியின் இணைப்பாட நடவடிக்கை ஆசிரியர் யானி குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘ஆட்டம்’, ‘நம் மரபு’ தொடரின்வழி 2,000க்கும் மேற்பட்டோரைச் சென்றடைந்துள்ளது.

சிங்கப்பூரில் நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்தவர்களின் மனத்தில் ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கலை நீங்கா இடத்தைப் பிடிக்கும் என்று நம்புவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கலைஇளையர்நடனம்

தொடர்புடைய செய்திகள்