70 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

70 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

3 mins read
முன்னாள் மாணவர்களின் நினைவுகளும் ஆசிரியர்களின் பார்வைகளும்
0cc72887-143c-4011-95f1-be2b32771676
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியின் 70வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 3

சுதந்திர சிங்கப்பூரைவிடப் பழைமையான வரலாற்றைக் கொண்டுள்ளது குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி. அது 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நாட்டின் தொழில்மயமாக்கலுக்கு உதவும் வகையில் முன்னோடி தொழில்நுட்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட அது, கடந்த எழுபது ஆண்டுகளுக்குச் சமூகப் பிணைப்பையும் முழுமையான கல்வியையும் வழங்கும் ஓர் அடையாளமாக உருவெடுத்துள்ளது.

அதன் 70வது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 23) கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் முன்னாள் மாணவரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டெஸ்மண்ட் டான் கலந்துகொண்டார். பள்ளியின் 70வது ஆண்டுநிறைவை முன்னிட்டுப் புதிய சுவரோவியத்தையும் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கூடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியின் 70வது ஆண்டுநிறைவை முன்னிட்டுப் புதிய சுவரோவியத்தைத் திறந்துவைத்தார் முன்னாள் மாணவரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டெஸ்மண்ட் டான் (இடமிருந்து நான்காவது). அவருடன் பள்ளியின் முக்கிய அதிகாரிகளும் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியின் 70வது ஆண்டுநிறைவை முன்னிட்டுப் புதிய சுவரோவியத்தைத் திறந்துவைத்தார் முன்னாள் மாணவரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டெஸ்மண்ட் டான் (இடமிருந்து நான்காவது). அவருடன் பள்ளியின் முக்கிய அதிகாரிகளும் ஆசிரியர்களும் இருக்கின்றனர். - படம்: பே. கார்த்திகேயன்

1988ஆம் ஆண்டு அங்குப் படிப்பை முடித்த அவர், பள்ளி சந்தித்த பல மாற்றங்களை நினைவுகூர்ந்தார்.

பள்ளி தொடர்ந்து காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டாலும் அதன் அடிப்படை விழுமியங்கள் உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார். அவையே இன்றுவரை தம்மை வழிநடத்துவதாகவும் திரு டான் குறிப்பிட்டார்.

சமூகத்திற்குப் பங்களிக்க மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் தொடர்ந்து முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியை முன்னாள் மாணவரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டெஸ்மண்ட் டான் சுற்றிப்பார்த்தார்.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியை முன்னாள் மாணவரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டெஸ்மண்ட் டான் சுற்றிப்பார்த்தார். - படம்: பே. கார்த்திகேயன்

பள்ளியின் வரலாற்று வேர்களை இளையர்கள் அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பள்ளி முதல்வர் சிம் ஹாவ் சோங் தமது உரையில் வலியுறுத்தினார்.

அதன் ஒரு பகுதியாக, இரண்டாம் நிலை மாணவர்கள் முன்னாள் மாணவர்களை நேர்கண்டு, பள்ளியின் வரலாற்றைப் பதிவுசெய்து பாரம்பரியக் கூடத்தை வடிவமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளியில் பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டிய திரு சிம், அடுத்த இலக்கான நூற்றாண்டை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நீண்ட காலம் சேவையாற்றிய ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓய்வுக்கால அங்கீகார விருதுகள் வழங்கப்பட்டன.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் நீண்ட காலம் சேவையாற்றியதற்காக விருதுகளுடன் தமிழாசிரியர் விஜயராணி கோவிந்தசாமியும், 66, (இடம்), ஆங்கில ஆசிரியர் சகுந்தலை சூரியனும், 62, சிறப்பிக்கப்பட்டனர்.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் நீண்ட காலம் சேவையாற்றியதற்காக விருதுகளுடன் தமிழாசிரியர் விஜயராணி கோவிந்தசாமியும், 66, (இடம்), ஆங்கில ஆசிரியர் சகுந்தலை சூரியனும், 62, சிறப்பிக்கப்பட்டனர். - படம்: பே. கார்த்திகேயன்

கல்வித்துறையில் 50 ஆண்டுகள் பணியாற்றிய குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் விஜயராணி கோவிந்தசாமி, 66, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து அப்பள்ளியில் கற்பித்து வருகிறார்.

பள்ளியின் புதிய தலைமையின் தொலைநோக்குப் பார்வையே தம்மைத் தொடர்ந்து பள்ளியில் இயங்கவைப்பதாகக் கூறிய அவர், சாதாரணக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் ஆயிரம் கனவுகளோடு அங்கு வருவதைச் சுட்டினார்.

நீண்ட காலம் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் தமிழாசிரியர் விஜயராணி கோவிந்தசாமி, 66.
நீண்ட காலம் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் தமிழாசிரியர் விஜயராணி கோவிந்தசாமி, 66. - படம்: பே. கார்த்திகேயன்

“மாணவர்களின் கனவுகளை நனவாக்கி, அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் பணியில் ஈடுபடுவதில் பெருமையடைகிறேன். இளைய தலைமுறையினருக்குப் பண்பாட்டு விழுமியங்களைச் சுவையாகக் கொண்டுசேர்ப்பதே என் நோக்கம்,” என்றார் அவர்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியுள்ள ஆங்கில ஆசிரியர் சகுந்தலை சூரியன், 62, ‘சாரணியர்’ இணைப்பாட நடவடிக்கைக்கு 17 ஆண்டுகளுக்குப் பொறுப்பு வகித்தார். சென்ற ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டார்.

நீண்ட காலம் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஆங்கில ஆசிரியர் சகுந்தலை சூரியன், 62.
நீண்ட காலம் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஆங்கில ஆசிரியர் சகுந்தலை சூரியன், 62. - படம்: பே. கார்த்திகேயன்

“தயக்கத்துடன் வரும் மாணவிகளுக்குத் தைரியம் ஊட்டி, அவர்களைச் சிறந்த தலைவர்களாக உருவாக்குவதே எனக்குக் கிடைத்த மிக பெரிய வெற்றி. இது சாதாரண வட்டாரப் பள்ளியாக இருந்தாலும் இங்குள்ள மாணவர்களிடம் அளப்பரிய ஆற்றல் உள்ளது,” என்று அவர் கூறினார்.

பள்ளியின் சமூகப் பிணைப்பு பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்கிறது.

2016ஆம் ஆண்டு அங்குப் படிப்பை முடித்த முன்னாள் மாணவர் சங்கச் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் சிவாஜி, 26, தேசிய மாணவர் படையின்வழி பத்தாண்டுகளாகப் பள்ளிக்குத் தொண்டூழியம் செய்து, தற்போது சங்கத்தின்வழி மற்ற முன்னாள் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு ஈர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் சிவாஜி, 26.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் சிவாஜி, 26. - படம்: பே. கார்த்திகேயன்

“பேசவே தயங்கிய எனக்குத் தலைமைத்துவப் பண்பையும் தகுந்த மேடையையும் அமைத்துத் தந்த பள்ளிக்குத் திரும்பச் சேவையாற்றுவது என் கடமை,” என்று விருந்தோம்பல் துறையில் பணியாற்றும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளியில் ஆண் - பெண், மூத்தவர் - இளையவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து விளையாடுவோம் என்று கூறினார் சட்டாம்பிள்ளையான உயர்நிலை மூன்று மாணவி ஆயிஷா ரைஹானா, 14.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கடினமான காலகட்டத்தில் இப்பள்ளியின் தொழில்நுட்பக் கல்வியே பலருக்கு வேலைவாய்ப்பை அளித்தது என்பதைப் பள்ளி வரலாற்றுத் திட்டத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் நிலை மாணவி ஆயிஷா ரைஹானா, 14.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் நிலை மாணவி ஆயிஷா ரைஹானா, 14. - படம்: பே. கார்த்திகேயன்

“முன்னோர்கள் தங்கள் உழைப்பால் இவ்வளவு சாதித்ததைப் பார்க்கும்போது, எங்களால் இன்னும் எவ்வளவு செய்ய முடியும் என்ற உந்துதல் உருவாகிறது,” என்றார் ஆயி‌‌‌ஷா.

குறிப்புச் சொற்கள்