‘மெளன ராகம்’ படத்தின் இசைக்கோப்பு, ‘பூவே இளைய பூவே’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களுடன் களைகட்டியது ‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ இசை நிகழ்ச்சி.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) எஸ்பிளனேட்டில் உள்ள சிங்டெல் நீர்முகப்பு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறத்தாழ 600 பேர் பங்கேற்றனர்.
இசைக்கலைஞர் சுபஸ்ரீ தணிகாசலத்தின் தலைமையில் ஏறத்தாழ 21 கலைஞர்கள் நேரடி இசைக் கச்சேரியை நடத்தினர். அமெரிக்காவிலிருந்தும் பாடகர்கள் சிலர் இணையம் வழி இணைந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். அவர்கள் இசைத்த ‘பொன்னொன்று கண்டேன்’ பாடல் ரசிக்கும்படி அமைந்தது.
பாடகர்கள் ஹரிச்சரண், ஸ்ரீவர்த்தினி, சந்தோஷ் சுப்பிரமணியன் முதலிய இசைக் கலைஞர்களுடன் உள்ளூர்க் கலைஞர்கள் திரிபுரசுந்தரி, லாவண்யா உள்ளிட்டோரும் திறன் காட்டினர்.
சுபஸ்ரீ தணிகாசலம், நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள் குறித்தும் அவற்றின் பின்னணி குறித்தும் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தார்.
காலத்தால் அழியாத பல பாடல்கள் இடம்பெற்றபோது பார்வையாளர்களும் உடன் பாடியது அரங்கினை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி சைந்தவி பாடிய ‘மன்னவன் வந்தானடி’, ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’, ‘நிலவு மலரும்போது’ ஆகிய பாடல்களுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது.
மேலும், ‘அவளுக்கென்ன அழகிய முகம்’, ‘பூங்கதவே தாழ்திறவாய்’ பாடல்கள் பார்வையாளர்களிடையே பெருவரவேற்பைப் பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
“அரங்கில் இடம்பெற்ற பாடல்களை இப்போதும் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன். நானும் என் தோழியும் இணைந்து இசை நிகழ்ச்சியைக் கண்டுகளித்தோம். பல பாடல்கள் எங்களைச் சிறுவயதிற்கு அழைத்துச் சென்றன. சிறப்பான மாலை நேரமாக அமைந்தது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாட்டி காயத்ரி.
மூன்றரை மணிநேரம் நீடித்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு மணித்துளியும் ரசிக்கும்படி அமைந்ததாகச் சொன்னார் ஜானகி வைத்தியநாதன்.
“நேரம் கடந்ததே தெரியாத அளவிற்கு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்தால் அதிலும் பங்கேற்க விரும்புகிறேன்,” என்றார் கனகேஸ்வரி ரவீந்திரன்.
“அதிக ஆர்ப்பாட்டமின்றி நிகழ்ச்சி சீராக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் தாலாட்டுப் பாடல்களைப் பாடியது கூடுதல் சிறப்பாக அமைந்தது. வீடு திரும்பி இடையூறின்றித் தூங்கவும் அது வழிவகுத்தது,” என்று சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார் பங்கேற்பாளர் கீதா ரவிச்சந்திரன்.
நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ‘பர்ப்பள் ஆரா’ எனும் உள்ளூர் நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

