எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் சாலையோரப் பதாகைகள்

எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் சாலையோரப் பதாகைகள்

2 mins read
41eed9a6-f295-4c2c-a483-7f6a9ea870fa
பழம்பெரும் உள்ளூர் எழுத்தாளர் சே.வெ. சண்முகத்தின் படமும் அவரைப் பற்றிய குறிப்புகளும் விளக்குக் கம்பப் பதாகை ஒன்றில் இடம்பெற்றுள்ளன. - படம்: த.கவி

தமிழ்மொழி விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் 64 பேரின் படங்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட பதாகைகள் சிராங்கூன் சாலையின் விளக்குக் கம்பங்களில் இடம்பெற்றுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சிராங்கூன் சாலையின் இருபுறங்களிலும் உள்ள விளக்குக் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள அந்தப் பதாகைகளுக்கு, லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

லிஷா ஒவ்வோர் ஆண்டும் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, உள்ளூர்த் திறனாளர்களை அங்கீகரிக்கும் விதமாக அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

“உள்ளூர் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தி அடையாளப்படுத்தும் நோக்கில் லிஷா இவ்வாண்டு 64 எழுத்தாளர்களை அடையாளங்கண்டு அந்தப் பதாகைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது,” என்று லிஷா இலக்கிய மன்றத் தலைவர் கண்ணன் சேஷாத்ரி தெரிவித்தார்.

அந்த முயற்சி, வாழும் எழுத்தாளர்கள் மட்டுமின்றி மறைந்த எழுத்தாளர்களையும் நினைவுகூர்ந்து கௌரவிப்பதாக திரு கண்ணன் சேஷாத்ரி கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமது எழுத்துப்படைப்பைப் பதிப்பித்து வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது தங்கமுனை விருதைப் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், தமிழ்ச் சமுதாயத்தில் அதிக ஈடுபாட்டுடன் சேவையாற்றி வருபவர்கள் அந்தப் பதாகைகள்வழி சிறப்பிக்கப்படுகின்றனர்.

அந்த 64 எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கும் ‘சிங்கைச் சுவடுகள்’ என்ற நூலை, லிஷா அமைப்பு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் சித்திரைக் கலை விழாவில் வெளியிட்டது. 

தமிழாசிரியையான கலைவாணி இளங்கோ, 40, அந்தப் பதாகைகளில் ஒன்றில் இடம்பெற்றுள்ளார்.

“நான் பதாகையில் இடம்பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். ஓர் ஆசிரியராக, என் மாணவர்களும் இதைக் கண்டு தமிழில் மேலும் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

எழுத்தாளரும் லிஷா இலக்கியக் குழு உறுப்பினருமான திருவாட்டி கங்கா பாஸ்கரன், “இந்தப் பதாகைகள், இவ்வாண்டு ‘ஈடுபாடு’ எனும் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளை ஒட்டி, சிங்கப்பூர் இலக்கியத்தைச் சிறப்பிக்க ஈடுபாட்டுடன் உழைத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்