‘இறப்பு’ தொடர்பான மனநல ஆய்வில் ஈடுபடும் பால் விக்டர் பட்டிநாதன்

‘இறப்பு’ தொடர்பான மனநல ஆய்வில் ஈடுபடும் பால் விக்டர் பட்டிநாதன்

2 mins read
295c784c-d5f6-422a-8a95-4868811f06a3
‘டேபிள் டு கன்சோல்’ நிகழ்ச்சியில் பால் விக்டர் பட்டிநாதன். - படம்: பால் விக்டர் பட்டிநாதன்
Google News Preferred Icon

உலகில் ஏறத்தாழ அனைவரும் பேசத் தயங்கும், அச்சப்படும் ஒன்றுதான் இவரது நிபுணத்துவம். சமூகத்தில் அதிகம் பேசப்படாத, உண்மையில் பேசப்படவேண்டிய ‘இறப்பு’ தொடர்பான மனநல ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் பால் விக்டர் பட்டிநாதன்.

இவர் ‘தானாட்டாலஜிஸ்ட்’ எனப்படும் இறப்பியல் நிபுணர்.

இறப்பு, அதனையொட்டிய துயரம் ஆகியவற்றை உளவியல், சமூகக் கண்ணோட்டங்களில் ஆய்வு செய்யும் வல்லுநர்.

“மரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது திடீரென ஒருநாளில் தோன்றிய முடிவன்று,” என்ற திரு பால் விக்டர், மனநலத் துறையைத் தேர்ந்தெடுக்க வித்திட்ட ஒரு சிறு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

தேசிய சேவை மேற்கொண்ட காலகட்டத்தில் ‘டாக்சி’ ஒன்றில் செல்ல நேர்ந்தபோது தமது சூதாட்டப் பழக்கத்தினால் குடும்பம் பிரிந்ததையும் அதனால் ஏற்பட்ட மனவேதனையையும் இவரிடம் கூறினார் டாக்சி ஓட்டுநர்.

வண்டி ஓட்டியபடியே மரத்தில் சென்று மோதிவிடலாமா என்றெல்லாம் தோன்றும் என அவரது மனநிலையைப் பகிரவே சற்றே தயக்கம் ஏற்பட்டாலும், அதை காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கியதை நினைவுகூர்ந்தார் பால் விக்டர்.

பின், அந்த ஓட்டுநருக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியவற்றையும் அவற்றைச் செயல்படுத்தாமல் விட்டதன் காரணத்தையும் கேட்டறிந்தார்.

அவருக்கு ஆறுதல் அளிக்கும் செயல்முறைகளைக் கூறிய பால் விக்டர் தம்மால் இயன்றவரை அவருக்கு ஆறுதல் அளித்தார்.

அப்பயணத்தின் இறுதியில், “நீங்கள் மனநல வல்லுநராகலாம்,” என அந்த ஓட்டுநர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். தேசிய சேவையைத் தொடர்ந்து மனநலத் துறையில் முழுநேர வேலையில் ஈடுபட முடிவெடுத்ததாகக் கூறினார் அவர்.

சமூகச் சுகாதார ஆய்வில் பணியாற்றத் தொடங்கிய பால் விக்டர், வாழ்வில் இறுதிக்கட்டத்திற்குத் தயாராகும் மனிதர்களுடன் பழகியபோது அதில் தென்பட்ட உண்மைத்தன்மை இந்தத் துறையை நோக்கித் தம்மை ஈர்த்ததாகச் சொன்னார்.

தமது ஆய்வின் அடிப்படையில், அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் நினைவாக அமைந்த உணவு வகைகளைச் சமைப்பது, துக்கத்தைப் பகிர்வது ஆகியவற்றுக்காக ‘டேபிள் டு கன்சோல்’ எனும் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தினார் பால் விக்டர்.

‘டேபிள் டு கன்சோல்’ நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் திரு பால் விக்டர்.
‘டேபிள் டு கன்சோல்’ நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் திரு பால் விக்டர். - படம்: பால் விக்டர் பட்டிநாதன்

அண்மையில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல், மானுடவியல் சார்ந்த கருத்துத் திரட்டு நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, ‘தோல்வியிலிருந்து முன்னோக்கி: மீள்திறன் குறித்து மானுடவியலும் சமூக அறிவியலும் நமக்கு என்ன கற்பிக்கின்றன?’ எனும் ஆலோசனையில் பங்கேற்றுப் பேசினார் பால் விக்டர்.

மரணம், இழப்பு, அதன் சமூகப் பார்வை குறித்துத் தொடர் ஆய்வில் ஈடுபடும் இவர், துயர் சார்பில் சிங்கப்பூரில் உள்ள மறைமுகச் செலவுகள், இழப்பால் வருந்துவோர்க்கு வழங்கப்படும் விடுமுறை அளவு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ள விரும்புவதாகச் சொன்னார்.

சிங்கப்பூர்ச் சமூகத்தில் மக்கள் துக்கத்தைப் பற்றிய மனப்போக்கை மாற்றுவதையும், சமூகத்திற்குள் மக்கள் எவ்வாறு ‘தடைகளின்றி துக்கம் அனுசரிக்கலாம்’ என்பது குறித்த கதைகளைச் சேகரிப்பதையும் அவர் தொடர விரும்புகிறார்.

துயர் குறித்த தவறான பார்வையை மாற்றி, மக்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் முறைகள் தொடர்பில் பணியாற்ற விரும்புவதாகவும் சொன்னார் பால் விக்டர்.

குறிப்புச் சொற்கள்