சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், தமிழ்மொழிக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பறைசாற்றும் நோக்கிலும் அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற இவ்வாண்டின் ‘சித்திரைக் கலை விழா’ நிகழ்ச்சியில், இலக்கிய நயம் வாய்ந்த திரைப்பாடல்கள் இசைக்கப்பட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தன.
ஆண்டுதோறும் ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்துவரும் இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு அதன் இலக்கிய மன்றத்துடன் இணைந்து ‘தமிழும் இசையும்’ என்ற கருப்பொருளில் 25வது முறையாக நடைபெற்றது.
சிராங்கூன் சாலை பிஜிபி மண்டபத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) மாலை அந்த இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சரும் மனிதவளத் துணையமைச்சருமான தினேஷ் வாசு தாஸ்.
கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டுக் கலைஞர்களான ‘இசைக்கவி’ ரமணனும் வீரமணி ராஜுவும் தொகுத்து வழங்கிச் சிறப்பித்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐந்து இசைக்கலைஞர்கள் ரசிகர்களது மனங்களை இனிமையான பாடல்களுடன் நிரப்பினர்.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’, ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ போன்ற இலக்கிய நயம் மிகுந்த தமிழ்ப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைக் கலைஞர்கள் வழிநடத்தினர்.
இசை மூலம் தமிழ்மொழிக் கற்றல், பேசுதல், வளர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பங்கேற்பாளர்களின் தமிழ் ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது என்று லிஷா அமைப்பின் தலைவர் ரெகுநாத் சிவா கூறினார்.
உள்ளூர் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம்
தொடர்புடைய செய்திகள்
தமிழிசையின் சிறப்புகளை மட்டுமல்லாமல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களையும் இந்நிகழ்ச்சி கௌரவித்தது.
சிராங்கூன் சாலையின் விளக்குக் கம்பங்களில் 64 உள்ளூர் எழுத்தாளர்களை அங்கீகரிக்க பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின்போது அவ்வெழுத்தாளர்களைப் பட்டியலிட்ட ‘சிங்கைச் சுவடுகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
மேலும், உள்ளூர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றிய தமிழ் நாடக முன்னோடி பி. கிருஷ்ணணுக்கும் கவிமாலை காப்பாளர் மா. அன்பழகனுக்கும் ‘லிஷா தமிழ்ப்பணிச் செம்மல் விருது’ வழங்கப்பட்டது.
“எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது ஊக்கம் அளிப்பதற்குப் பரிசுகள் வழங்கவேண்டும். பரிசு சிறிதாக இருந்தாலும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது என்ற எண்ணத்தில், எழுத்தாளர்களால் மிகச் சிறப்பான படைப்புகளை வழங்கமுடியும்,” என்றார் திரு பி. கிருஷ்ணன்.
திரு மா. அன்பழகனின் சார்பில் அவரது 12 வயது பேத்தி நித்திலா விருதைப் பெற்றுக்கொண்டார். “என் தாத்தா தமிழுக்கு அதிகம் பங்காற்றியுள்ளார். அவர் எனக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்,” என்று அவர் கூறினார்.
இத்தகைய நிகழ்ச்சிகள் நம் கலாசாரம், பண்பாடு, வேர்கள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள உதவுகின்றன என்று நிகழ்ச்சியை ரசித்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம் கூறினார்.
பாட்டு அங்கத்தில் ‘அம்மா என்றழைக்காத’, ‘நறுமுகையே’, ‘தென்மதுரை வைகை நதி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிய தமிழ்முரசு விளம்பரத் துறையின் வரைகலைஞர் விக்டர் ஜான்பால், 42, தமிழகத்தில் பிரபலமான கலைஞர்களுடன் பங்கேற்ற தருணத்தை எண்ணி மகிழ்ந்தார்.
நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சார்பில் பேரன் 21 வயது ஆகில் முகமது பிலால், தமது தாத்தாவின் சார்பாக நூலைப் பெற்றது குறித்து மகிழ்வதாகக் கூறினார். “இசையையும் சேர்த்து தமிழைப் போற்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அருமையாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.

