கலைகளின் சங்கமத்தில் ‘மாதொருபாகன்’

கலைகளின் சங்கமத்தில் ‘மாதொருபாகன்’

2 mins read
459e289e-342c-4624-b13e-924c522ae442
நாடக ஒத்திகை பார்க்கும் கலைஞர்கள். - படம்: செரிஸ் ஆங்
Google News Preferred Icon

‘சௌக் புரோடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம், எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற புதின நாவலான ‘மாதொருபாகன்’ கதையை ‘ஒன் பார்ட் வுமன்’ என்ற நடன, நாடகமாக வழங்குகிறது.

இந்தத் தயாரிப்பு, குழந்தை இல்லாத தம்பதிகளான காளி மற்றும் பொன்னா, சமூகப் புறக்கணிப்புகளையும் கோவில் திருவிழாவின் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கிறது.

ஒடிசி நடனம், நாட்டுப்புற மரபுகள் மற்றும் நேரடி இசை ஆகியவற்றின் சங்கமமாக, சமூக நெறிமுறைகள் சரிந்து தங்கள் அடையாளம் சோதிக்கப்படுவதை இது மீண்டும் கற்பனை செய்கிறது.

இந்த ஆக்கபூர்வமான தயாரிப்பு, கதை மீதான ஆழமான புரிதலையும் உடனடிக் கற்பனைத்திறனையும் நம்பியுள்ளது.

நடன கலைஞர்களுடன் மீரா குருமூர்த்தி.
நடன கலைஞர்களுடன் மீரா குருமூர்த்தி. - படம்: செரிஸ் ஆங்

ஒடிசி நடனக் கலைஞர் மீரா குருமூர்த்தி, 41, “ஒவ்வோர் அமர்வும் ஒரு புதிய கற்பனையே. குழந்தை இல்லாததால் ஒரு சமூகம் கதையின் தம்பதியினரை எவ்வாறு ஒதுக்குகிறது என்பதையும், அந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்ட நாங்கள் அசைவுகளையும் இசையையும் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

நடன அமைப்பாளர் ராகா மைத்ரா, 56, கூறுகையில், “அசைவுகளைப் பார்க்கும்போது நான் ஓவியங்களையும் சிற்பங்களையும் காண்கிறேன். இந்தச் சிறந்த கதைக்கு நாடகம் அவசியமானது.

“இது ஒடிசி நடனத்தை நாட்டுப்புற மரபுகளுடன் இணைத்து அதன் ‘வேரை’ கண்டறிய உதவுகிறது,” என்றார்.

“பல அடுக்குகளைக் கொண்ட இந்த நாவலை 90 நிமிடங்களுக்குள் சுருக்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் திடீரென்று மேடையில் நடப்பதையும் சுவாசிப்பதையும் காண்பது வியப்பளிக்கிறது,” என்கிறார் இயக்குநர் லட்சுமணன், 35, .

ஒத்துழைப்பாளரும் நடிகருமான சரண்ஜித், 37,
ஒத்துழைப்பாளரும் நடிகருமான சரண்ஜித், 37, - படம்: செரிஸ் ஆங்

ஒத்துழைப்பாளரும் நடிகருமான சரண்ஜித், 37, “காளியும் பொன்னாவும் ஒருவருக்கொருவர் மிகச் சரியாகப் பொருந்துகிறார்கள்.

ஆனால், இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்தால், ஆண்டுகள் செல்லச் செல்ல அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் குறைந்து, அவர்களின் உறவு மாறுவதை நீங்கள் காணலாம்” எனக் கூறினார்.

‘ஒன் பார்ட் வுமன்’, இலக்கியச் செழுமை மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் அரிய சங்கமமாக விளங்குவதோடு, அன்பிற்கான தேடலைச் சாட்சியாகக் காண பார்வையாளர்களை அழைக்கிறது.

குறிப்புச் சொற்கள்