ஆ. விஷ்ணு வர்தினி
விலங்கியல் பட்டதாரியான கண்ணனுக்கு மிக நெருக்கமானவை பாம்புகள், முதலைகள், உடும்புகள் முதலியன.
இங்கிலாந்தின் பேங்கோர் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவரின் கண்முன்பாக விரிந்தது அங்கிருந்த பரந்த ஊர்வன, ஈரிட வாழ்விகள் உலகம்.
இத்தகைய உயிரினங்களைச் செல்லப்பிராணிகளாய் வளர்ப்பது இங்கிலாந்தில் சட்டப்பூர்வமானது.
எனவே, மலைப்பாம்புகள், பன்றிமூக்குப் பாம்புகள் என பல்வேறு பாம்பினங்களுக்குத் தமது நண்பர்களின்மூலம் அறிமுகமானார் கண்ணன், 33.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 30 பாம்புகள் வைத்திருந்தோர், 14 அடி நீளமுள்ள பாம்புகள் வரை வளர்த்தோர் ஆகியோரின் வாயிலாக கண்ணன் பாம்புகளின் உலகுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் பட்டப்படிப்பு முடித்து சிங்கப்பூர் திரும்பியபோது இங்குள்ள ஊர்வன, ஈரிட வாழ்விகள் அவரின் கவனத்தை ஈர்த்தன.
தொண்டூழிய அமைப்பான சிங்கப்பூர் ஊர்வன, ஈரிட வாழ்விகள் சங்கத்தில் (எச்எஸ்எஸ்) உறுப்பினராக இணைந்து, தற்போது பத்தாண்டுகளைக் கொண்டாடும் அந்த அமைப்பில் ஈராண்டு காலமாக தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சரியான தகவல்கள் குறித்து விழிப்புணர்வூட்டுவது, இவ்வுயிரினங்களை மக்கள் அரவணைக்க வகைசெய்வது, ஆய்வுகள் ஆகியன எச்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகள்.
சிங்கப்பூர் 69 பாம்புவகைகளுக்கு இல்லமாகத் திகழ்கிறது. இவற்றில் சில வகைகள் மட்டுமே மக்கள் அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானவை.
எல்லா பாம்புகளும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்றோ, கொல்லப்பட வேண்டியவை என்றோ மக்கள் கொண்டுள்ள எண்ணம் மாற கண்ணனும் அவரது சங்க உறுப்பினர்களும் பாடுபடுகின்றனர்.
“இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் சிலர் காட்டுப்பகுதிகளை ஒட்டி வீடு வாங்குகின்றனர். ஆனால், பாம்புகளும் உடும்புகளும்கூட அந்த இயற்கையின் ஓர் அங்கம்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
“நகர்ப்புறத்துக்கும் வனப்பகுதிக்கும் இடையேயான தூரம் குறைந்து வருவதால், இவ்வுயிரினங்களை நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது அவசியம்,” என்றார், தேசியப் பல்கலைக்கழகத்தில் முழுநேரத் துணை ஆசிரியராகப் பணிபுரியும் ரா. கமலக்கண்ணன்.
பூன் லேயில் கடந்தாண்டு ஆறு பேரால் வெட்டிக் கொல்லப்பட்ட ஒரு மலைப்பாம்பின் காணொளி கண்ணனை வெகுவாகப் பாதித்த ஒன்று.
நாய், பூனைகளைப் போல எளிதில் அன்பாக அரவணைக்கப்படக் கூடிய விலங்குகளாக பாம்புகளோ பிற ஊர்வனங்களோ கருதப்படாமல் இருக்கலாம்.
இக்காரணத்தைக் காட்டி விலங்குவதையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோ அல்லது நியாயப்படுத்துவதோ சரியல்ல என்பது அவரின் கருத்து.
‘புரொஜெக்ட் ரன்ஓவர்’ எனும் திட்டத்தின்மூலம் 2021 முதல் சிங்கப்பூரில் ஊர்வன, ஈரிட வாழ்விகளுக்கு நேர்ந்த சாலை விபத்துகளை எச்எஸ்எஸ் சேகரித்துள்ளது. நான்காண்டுகளில் இவ்வுயிரினங்களில் ஏறத்தாழ 1,000 சாலை விபத்துக்குள்ளாகின. இவற்றில் பாம்புகளே மிக அதிகமாகப் பலியாகின்றன.
கடந்த ஆண்டு மட்டும் தீவு முழுவதிலும் குறைந்தபட்சம் 120 பாம்புகளை வாகனங்கள் மோதியுள்ளது கவலையளிக்கும் நிலவரம் என்றார் கண்ணன்.
சிங்கப்பூரின் நிலப்பரப்பில் 12 விழுக்காட்டினை சாலைப்பகுதிகள் ஆக்கிரமிக்கின்றன. உயிரினங்கள் பாதுகாப்பாக சாலைகளைக் கடக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் ஈகோ-லிங்க்@பிகேஇ மேம்பாலம் போன்ற பலதரப்பட்ட யோசனைகள் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்துவருகிறது.
இவை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிங்கப்பூர் நிலப்பரப்புப் பாதுகாப்புத் திட்டம்’ எனும் நூலில் ஆராயப்பட்டுள்ளன. அதில் அடிக்கோடிடப்பட்ட 40 பரிந்துரைகளையும் அரசாங்கம் ஆலோசிக்கும் என அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்திருந்தார். இதன் ஆசிரியர்களில் ஒருவரும் எச்எஸ்எஸ்ஸைத் தோற்றுவித்தோரில் ஒருவரான திரு சங்கர், ஊர்வனவற்றை அச்சுறுத்தும் முக்கிய சவால்களை அதில் சுட்டியுள்ளார்.
நிலத்தில் உள்ள வளைவாழ் பாம்புகள் வனப்பகுதிகளுக்கு அருகே உள்ள ஆழமான வடிகால்களில் சிக்கிக்கொள்வதுண்டு.
எலிகள், பல்லிகள் முதலியவற்றுக்காக வைக்கும் பொறிகளில் பாம்புகளும் உடும்புகளும் மாட்டிக்கொள்வதுண்டு. இச்சிக்கல்களைக் களைவது இவ்விலங்குகளின் நலனில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றார் கண்ணன்.
ஊர்வன, ஈரிட வாழ்விகளைப் பற்றி கூடுதலாக மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் எனும் எண்ணத்தில் மாதந்தோறும் எச்எஸ்எஸ்ஸின் இலவச நடைப்பயணங்கள் இடம்பெறுகின்றன.
சுங்கை பூலோ, புக்கிட் தீமா முதலிய பல பகுதிகளில் சங்கத்தின் தொண்டூழியர்களால் வழிநடத்தப்படும் இந்தப் பயணங்களில் இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், குடும்பங்கள் எனப் பலரும் இப்பிராணிகளின் உலகத்தை நேரடியாகக் கண்டுள்ளனர், அவற்றைக் குறித்து கற்றுள்ளனர்.
“எங்களின் ஆக முக்கிய சவாலாக இருப்பது மக்களின் அச்சங்களும் இவ்விலங்குகள் குறித்த போலிச் செய்திகளின் பரவலும்தான். சரியான தகவல்களை வழங்கி, இவ்விலங்குகளைப் பற்றி மக்கள் இன்னும் புரிந்துகொள்ள வகைசெய்வதே எங்களின் திட்டம்,” என்றார் கண்ணன்.

