ஒளிரும் கனவுகளுடன் தொடங்கிய ‘இளந்தளிரும் இளந்தமிழும்’

ஒளிரும் கனவுகளுடன் தொடங்கிய ‘இளந்தளிரும் இளந்தமிழும்’

3 mins read
8c40f130-e2f1-45c2-a5a9-24035f371f86
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்குடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். - படம்: இளந்தளிர் தமிழ்க் கழகம்
Google News Preferred Icon

தமிழ் மொழி வகுப்பறையைக் கடந்து வீட்டில் பேசப்பட வேண்டும், சமூகத்தில் வாழும் மொழியாகத் தழைக்க வேண்டும். உன்னதமான இந்த நோக்கத்தை உறுதிசெய்வதில் தமிழ் ஆர்வலர் அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது என்று வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் தெரிவித்துள்ளார்.

இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘இளந்தளிரும் இளந்தமிழும் 2026’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் ஹமீது, “தமிழைக் கற்பிக்க முற்படுபவர்கள், இளையர்கள் இருக்கும் இடங்களைத் தேடிச் செல்ல வேண்டும். மின்னிலக்கத் தளங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவையே அந்த இடங்கள்,” என்று குறிப்பிட்டார்.

தமிழ் கற்பதையும் படைப்பாற்றலையும் மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவு கருவியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட டாக்டர் ஹமீது, புதுமையின்வழி தமிழின் எதிர்காலத்தையும் நாம் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ் அமைப்புகள், ஆசிரியர்கள், ஊடகங்கள் இணைந்து கலைச்சொற்களை ஒருமைப்படுத்துவது குறித்தும் பேசிய அவர், ஒரு மொழி வளர வேண்டுமென்றால், அது ஒரே குரலில் பேசப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக். - படம்: இளந்தளிர் தமிழ்க் கழகம்

தரநிலைப்படுத்தப்பட்ட அத்தகைய சொற்கள், தமிழை நவீனமாகவும், பொருத்தமானதாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

படைப்பாற்றலுக்குச் சவால்

இளந்தளிர் தமிழ்க் கழகத்தின் ஏற்பாட்டில் ‘இளந்தளிரும் இளந்தமிழும் 2026’ நிகழ்ச்சி ஜூலை 5ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாணவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டி அங்கங்கள் இடம்பெற்றன. மாணவர்களின் வயது, பயிலும் வகுப்பு அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடக்கநிலை 1, 2 மாணவர்களுக்குத் ‘துளிர்’ என்ற அங்கத்தில் ‘என்னைக் கவர்ந்த பாரம்பரிய விளையாட்டு’ என்ற தலைப்பில் 2 நிமிடக் காணொளிப் போட்டி நடத்தப்பட்டது.

தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கு ‘அரும்பு’ என்ற அங்கத்தின்கீழ், தமிழ் முரசில் வெளிவந்த செய்திகளைத் தேர்ந்தெடுத்து, செய்தி வாசிப்பாளர்களைப்போல் 2 நிமிடங்களுக்கு வாசிக்கும் ‘செய்தி வாசித்தல்’ போட்டி நடத்தப்பட்டது.

மாணவர்களின் மொழித்திறனைச் சோதிக்கும் வகையில் தொடக்கநிலை 5, 6 மாணவர்களுக்கு ‘மலர்’ என்ற குறுக்கெழுத்துப் போட்டியும் நடத்தப்பட்டது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் ‘செயற்கை நுண்ணறிவுத் திரையில் தமிழ்ப் பாரம்பரிய உணவு’ என்ற தலைப்பில் 2 நிமிடக் குரல் பதிவுடன் கூடிய காணொளி விளம்பரம் தயாரிக்கும் போட்டியும் நடந்தது.

போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் 200 பேருக்கும் பங்களிப்புச் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் ‘பாப்புலர்’ பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

இயற்கைப் பாதுகாப்பு பற்றிய ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த, போட்டியில் கலந்து கொண்ட 200 மாணவர்களுக்கும் செடிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மற்ற அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழர் பேரவைத் தலைவர் திரு. வி. பாண்டியன், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அ. முஹம்மது பிலால், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மிளிர முற்படும் புதிய அமைப்பு

இவ்வாண்டு ஏப்ரல்முதல் செயல்பட்டுவரும் இளந்தளிர் தமிழ்க் கழகம், தமிழ் மொழி, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை இளைய தலைமுறையினருடன் இணைக்கும் சமூகப் பயணத்தின் தொடக்கம் என்று அதன் தலைவர் நபீலா நஸ்ரின் கூறினார்.

“இன்றைய மாணவர்கள் நாளைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்முனைவோர், சமூகத் தலைவர்கள் முதலியோராகத் திகழவிருக்கின்றனர். உலக அரங்கில் அவர்கள் உயரும்போது, தமிழும் அவர்களுடன் உயர வேண்டும் என்பதே எங்கள் கனவு,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்மொழிபோட்டிசமூகம்