‘ஸ்பைரோஸ்’ கப்பல் விபத்தை ஒட்டிய வரலாற்றுப் புதினம்

சம்பவத்தை நேரடியாகக் கண்டவர்களைத் தேடும் எழுத்தாளர் மணிமாலா மதியழகன்

‘ஸ்பைரோஸ்’ கப்பல் விபத்தை ஒட்டிய வரலாற்றுப் புதினம்

4 mins read
1fef6a82-c72d-49d4-97b2-278bf16241fb
சிங்கப்பூர் வரலாற்றில் நிகழ்ந்த ஆக மோசமான ‘ஸ்பைரோஸ்’ தொழில்துறை விபத்தில் கப்பலில் வேலை செய்துகொண்டிருந்த 48 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 69 பேர் காயமடைந்தனர். இறுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76ஐ எட்டியது. - கோப்புப்படம்: சின் சியூ நாளிதழ் (சிங்கப்பூர்)
Google News Preferred Icon

வரலாற்றின் முதல் வரைவுகளான செய்தி அறிக்கைகளின் நீட்சியாக எழுதப்படும் புனைவுகள், அரிய தரவுகளுடன் ஆழமான உணர்வுகளைப் பக்கம் பக்கமாய்த் தாங்குகின்றன.

சிங்கப்பூரில் 1978ல் ‘ஸ்பைரோஸ்’ கப்பல் விபத்தை மீண்டும் நினைவலைகளுக்குக் கொண்டுவரும் முயற்சியில் எழுத்தாளர் மணிமாலா ஈடுபட்டுள்ளார்.

1978 அக்டோபர் 12ஆம் தேதி பிற்பகலில் ஜூரோங் கப்பல் பட்டறையில் பழுதுபார்ப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தது ‘ஸ்பைரோஸ்’ கப்பல். அப்போது திடீரென்று கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அந்த எண்ணெய்க் கப்பலின் மின்பொறியிலும் கொதிகலன் அறைகளிலும் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. 

சிங்கப்பூர் வரலாற்றில் நிகழ்ந்த ஆக மோசமான தொழில்துறை விபத்து அது. கப்பலில் வேலை செய்துகொண்டிருந்த 48 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 69 பேர் காயமடைந்தனர். இறுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76ஐ எட்டியது.

அந்தச் சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரில் வேலைப் பாதுகாப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

சம்பவம் பற்றிய ஆய்வு, எழுத்துப்பணி என இந்தப் புத்தகத்திற்காக இதுவரை கிட்டத்தட்ட ஈராண்டுகள் உழைத்துள்ள மணிமாலா மதியழகன், துல்லியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் களப்பணிகளை மேலும் தொடர்கிறார்.

தேசிய நூலக வாரியத்தின் சேவையின் மூலம் பழைய ‘தமிழ் முரசு’ நாளிதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, கப்பல் விபத்து பற்றிய செய்திக் கட்டுரைகள் கண்களில் தென்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

1978ல் கிரேக்க எண்ணெய்க் கப்பலான ஸ்பைரோஸ் வெடித்து 76 பேர் பலியாயினர். 
1978ல் கிரேக்க எண்ணெய்க் கப்பலான ஸ்பைரோஸ் வெடித்து 76 பேர் பலியாயினர்.  - படம்: ஜெர்ரி சே

“கப்பல் துறையைப் பற்றி இதற்கு முன்னர் நான் அதிகம் படித்திருக்கவில்லை என்றாலும் அந்தச் சம்பவம் என் மனத்தில் நின்றது. இதைப் பற்றிய புதினக் கதை ஒன்றை என் வாசகர்களுக்கு வடித்துத்தர விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.

56 வயது திருவாட்டி மணிமாலா, கதைக்கு ஏற்ற வகையில் நுணுக்கங்களுடன் விரிவாக எழுதக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

எனினும், தற்கால வரலாற்றுப் புதினத்தைக் கற்பனையைக் கொண்டு மட்டும் எழுதிவிட முடியாது என்பதைத் தொடக்கத்திலேயே உணர்ந்திருந்தார் மணிமாலா.

“இதை எப்படி எழுதப்போகிறேன் என்று சற்று அச்சமாக இருந்தது,” என்று தமது தயக்கத்தை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு, ‘ஸ்பைரோஸ்’ விபத்தில் காயமடைந்து வேதனையில் துடித்துக்கொண்டிருந்த ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் இருவர் தள்ளுவண்டியில் அழைத்துச் செல்கின்றனர்.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு, ‘ஸ்பைரோஸ்’ விபத்தில் காயமடைந்து வேதனையில் துடித்துக்கொண்டிருந்த ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் இருவர் தள்ளுவண்டியில் அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கைகொடுக்கும் நூலகம்

இதற்காக அவர், தேசிய நூலகத்தின் உதவியை நாடினார். நூலகத்தின் 11வது தளத்தில் உள்ள ஆவணங்களைப் பார்த்தபோது அவர் திகைத்துப் போனார்.

“நூலகத்தில் இதைப் பற்றி வேறு எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால், விசாரணையில் அந்த 20 நாள்களில் என்ன நடந்தது என்ற அறிக்கையை அப்படியே வைத்திருந்தார்கள். மொத்தம் 4 புத்தகங்கள் உள்ளன,” என்கிறார்.

இந்த 4 தொகுப்புகளையும் விரிவாக ஆய்வு செய்த பின்னரே அவர் எழுதத் தொடங்கினார். அத்துடன், கப்பல் துறையில் பணியாற்றும் தமது கணவரிடமும் திருவாட்டி மணிமாலா ஆலோசனை பெற்றார்.

“ஒரு கப்பல், சிங்கப்பூரின் கடல் எல்லைக்குள் வரும்போது அதிகாரிகள் எத்தகைய முறையைக் கொண்டு அதனைக் கையாள்கின்றனர், அதற்கான நடைமுறை என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். நான் சில வரிகளை எழுதிவிட்டு அவரிடம் சொல்லும்போது, ‘இல்லை, இது இப்படி நடந்திருக்காது, இதற்கு முன்னால் வேறு ஏதோ நடந்திருக்கும்’ என்று அவர் சொல்வார்,” எனத் தம் கணவரின் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார் திருவாட்டி மணிமாலா.

விபத்து நேர்ந்தபோது அருகிலிருந்த திரு சுப்பிரமணியன் கிருஷ்ணசாமி (இடக்கோடி), ஜேம்ஸ் (வலமிருந்து இரண்டாமவர்). உடன் எழுத்தாளர் மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம். 
விபத்து நேர்ந்தபோது அருகிலிருந்த திரு சுப்பிரமணியன் கிருஷ்ணசாமி (இடக்கோடி), ஜேம்ஸ் (வலமிருந்து இரண்டாமவர்). உடன் எழுத்தாளர் மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம்.  - படம்: மணிமாலா மதியழகன்

கால மாற்றமும் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, 1999ல் இருந்து சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் அவரது புலன்களுக்கு, 1978ல் நிலவிய சிங்கப்பூர்ச் சூழல் அப்பாற்பட்டிருந்தது.

“1970களில் சிங்கப்பூரின் சமூக வாழ்வியல் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அது தொடர்பான கதைகளைக் கூர்ந்து படித்தேன். அதிலிருக்கும் சிறு தகவல்கள்கூட என் எழுத்துக்குப் பேருதவியாய் இருக்கின்றன,” என்று அவர் கூறினார்.

நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இந்தத் துயரச் சம்பவங்களின் வலியையும் வடுக்களையும் தாங்கி நிற்பவை. விபத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தில் அக்கா, தங்கை என இருவர் பலியானதையும் அக்காவுக்குப் பத்து பிள்ளைகள் இருந்ததையும் பழைய செய்தித்தாள்களிலிருந்து திருவாட்டி மணிமாலா தெரிந்துகொண்டார்.

இத்தகைய வலியை வார்த்தைகளால் சித்திரிப்பது எழுதுபவரின் மனத்தையும் தைக்கும் என்றார் அவர்.

-

“பத்துப் பிள்ளைகளுக்குத் தாயானவர் திடீரென இறக்கும்போது குடும்பத்தில் எல்லாரும் எவ்வளவு வலியோடு இருப்பார்கள்? எனது கதை மாந்தர்களின் வலியை மனத்தில் சுமக்கிறேன்,” என்று உருக்கமாகக் கூறுகிறார்.

கப்பலின் இயந்திர அறையில் வேலை பார்த்து உயிர்நீத்த ஊழியர்கள், தலைமைப் பொறியாளர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அவரது மனத்திற்கு மிக நெருக்கமானவை. இயந்திர அறையில் அப்போது நிலவிய நெருக்குதலையும் கடுமையான வேலைச் சூழலையும் அவர் நாவலில் பதிவு செய்துள்ளார்.

அனுபவக் கலந்துரையாடல்

தகவல்களுக்காகவும் உயிரோட்டமான அனுபவங்களுக்காகவும் பலரை அணுகியதாகக் கூறிய திருவாட்டி மணிமாலா, மூத்த ஊடகவியலாளர் ஜி.டி.மணி, ஜேம்ஸ், சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி ஆகியோரைச் சந்தித்ததாகச் சொன்னார்.

இதனையொட்டிய கலந்துரையாடல் மே 3ல் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. 

தேசிய கலை மன்றமும் தேசிய நூலக வாரியத்தின் எழுத்தாளர் கூடமும் இணைந்துள்ள திட்டத்தி ஒரு பகுதியாகக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

“அண்ணாந்து பார்த்தபோது அன்றைய தெளிந்த நீலவானம் காணாமல் போயிருந்தது. அதற்குப் பதில் கரிய அடர்ந்த புகை சூரியனை மறைத்துக்கொண்டு வானத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது,” என்று ஜி.டி.மணி அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது காணொளிவழி கூறினார்.

விபத்து நிகழ்ந்த நாள் காலையில் பெய்த கனமழையால் வேலைக்குச் செல்லாததால் விபத்திலிருந்து தப்பிய ஜேம்ஸ், தமது அனுபவத்தை விவரித்தார். “அன்று நான் வேலைக்குச் சென்றிருந்தால் நானும் இறந்திருப்பேன்,” என்று அவர் தழுதழுத்த குரலில் கூறியிருந்தார்.

மூன்றாமவரான சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி, விபத்தின்போது வெளியில் இருந்தார். பின்னர் உள்ளே சென்று நண்பர்களைத் தேடினார். ஓரமாக மயங்கிய நிலையில் உயிர் தப்பிய நண்பரைப் பற்றிய தகவலை அவர் மணிமாலாவிடம் பகிர்ந்தார்.

கிட்டத்தட்ட 400 முதல் 500 பக்கங்கள் வரை விரிவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதினம், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூலகங்களின் ஆவணப்படுத்தல் பணியின் முக்கியத்துவத்தை அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

“தமிழ் முரசும் தேசிய நூலகமும் செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளது எனக்குப் பேருதவியாக உள்ளது. எழுத்தின் மூலம் பதிவு செய்து, எதிர்காலத் தலைமுறைக்குப் படிப்பினையாகக் கொண்டுசெல்வதே இந்த மாபெரும் முயற்சியின் நோக்கமாக உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கப்பல்விபத்துஎரிபொருள்இலக்கியம்