வீட்டிலேயே காய்கறி வளர்க்கத் துணைபுரியும் ‘குரோ லா!’ திட்டம்

வீட்டிலேயே காய்கறி வளர்க்கத் துணைபுரியும் ‘குரோ லா!’ திட்டம்

2 mins read
bd5f5bf9-6b44-4a3a-80eb-7d72f78bbb30
திருவாட்டி லலிதம்மா நாயர், சமூகத் தோட்டங்கள், சுற்றுச்சூழல் கல்வித் திட்டங்கள், அடித்தள நிலைத்தன்மை முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடு மீண்டும் இணைய பல்லாண்டுகளாகச் சிங்கப்பூரர்களை ஊக்குவித்து வருகிறார். - படம்: கிரீன் அப் சிங்கப்பூர்/ இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

சமூகத் தோட்டங்கள்வழி இயற்கையுடன் மீண்டும் இணையும்படி சிங்கப்பூரர்களை ஊக்குவித்து வருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் லலிதம்மா நாயர்.

இப்போது ‘குரோ லா!’ (Grow Lah!) என்ற புதிய திட்டத்தின் வழி, காய்கறிகளை அடுக்குமாடி வீடுகளிலேயே வளர்க்குமாறு மக்களை அவர் ஊக்கப்படுத்துகிறார்.

‘கிரீன் அப் சிங்கப்பூர்’ (Green Up Singapore) அமைப்பு இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தத் திட்டம் ஜூன் 27ஆம் தேதி ஈசூனில் உள்ள ‘த்சு சீ’ மனிதாபிமான இளையர் நிலையத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

சமூகத் தலைவர்கள், நீடித்த நிலைத்தன்மை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொண்டூழியர்கள், அடித்தள ஆலோசகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கடப்பாட்டு உணர்வில் இணைந்துள்ள அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நகர்ப்புற வேளாண்மையை அனைவருக்கும் எளிமையானதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதே ‘குரோ லா!’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பசுமைச் சுற்றுலாக்களை வழிநடத்தும் லலிதம்மா நாயர்.
பசுமைச் சுற்றுலாக்களை வழிநடத்தும் லலிதம்மா நாயர். - படம்: கிரீன் அப் சிங்கப்பூர் / இன்ஸ்டகிராம்

பங்கேற்பாளர்களுக்குச் செய்முறைப் பயிற்சி, வழிகாட்டிக் குறிப்புகள், ‘மைக்ரோகிரீன்ஸ்’ (microgreens) எனப்படும் நுண்கீரைகளை வளர்ப்பதற்கான கருவிகள் ஆகியவை வழங்கப்படும். இதன்மூலம், அவர்கள் தங்கள் வீடுகளிலேயே சத்து நிறைந்த காய்கறிகளை மிக எளிதாக வளர்க்க முடியும்.

தாவரங்களை வளர்க்கும் பசுமை நோக்கம் மட்டுமன்றி, பயிலரங்குகள், தொண்டூழிய நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழி 2,000 பங்கேற்பாளர்களைச் சென்றடைய இந்தத் திட்டம் முற்படுகிறது.

சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்க இந்தத் திட்டம் முனைகிறது.

இயற்கையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் பிள்ளைகள், மன அமைதி தரும் பொழுதுபோக்கைத் தேடும் முதியவர்கள் அல்லது குறைந்த இடவசதி கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் ‘மைக்ரோகிரீன்ஸ்’ வளர்ப்பது எளிமையான தொடக்கமாக அமையும்.

இத்தகைய சூழலில் வளர்க்கப்படும் காய்கறிகள் விரைவாக வளரக்கூடியவை; மேலும், சில நாள்களிலேயே அவற்றை அறுவடை செய்துவிடலாம் என்கிறார் திருவாட்டி லலிதம்மா.

குறிப்புச் சொற்கள்
வேளாண்மைகாய்கறிபசுமைஒருங்கிணைப்பு