மாணவர்களுக்காக இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

மாணவர்களுக்காக இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

3 mins read
6359afe5-e5d5-4dfe-b803-f8e3aa532704
செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு. - படம் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

இந்தச் சூழலில், உயர்நிலை பள்ளி மாணவர்கள், இத்தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம். மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையான திறன்களையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஓர் இலவச ஏஐ பயிலரங்கிற்கு சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் ஏற்பாடு செய்தது.

இப்போதைய நவீன கல்விச் சூழலில் மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய  ‘ஏஐ ஸ்டடி ஹேக்ஸ்’, ‘ஏஐ எத்திக்ஸ்’ போன்ற ஏஐ தொழில்நுட்பத்தின் பல்வேறு முக்கியக் கூறுகளைக் கற்பிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்கில் கிட்டத்தட்ட 35 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள சிலோன் விளையாட்டு மன்றத்தில் ஜூலை 25ஆம் தேதி சனிக்கிழமை இந்தப் பயிலரங்கு நடைபெற்றது.

“அடுத்த தலைமுறையினருக்கு எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வழங்குவது  எங்களின்  நோக்கம். அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், அவர்களின் சமூக அல்லது பொருளியல் பின்னணி எதுவாக இருந்தாலும், ‘பிராம்ப்ட் எஞ்சினியரிங்’, ‘ஏஐ எத்திக்ஸ்’ போன்ற மிகவும் தேவையான மின்னிலக்கத் திறன்களை இலவசமாகப் பெறுவதை உறுதிசெய்வதற்காக இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தோம்,” என்றார் ஏற்பாட்டு குழு உறுப்பினர் தர்ஷினி சரவணன், 20.

‘ஸ்டோரிலேப் அகாடமி’யின் தொழில்முறைப் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுவதன்மூலம், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டும், தாமாகச் சிந்திக்கவும், வேகமாகக் கற்றுக்கொள்ளவும், தொழில்நுட்பப் பொறுப்பை ஊக்குவிக்கவும் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

“ஏஐ எத்திக்ஸ் மிகவும் முக்கியமானது. வெளிநாட்டு நிறுவனங்கள் நமது தரவை எவ்வாறு கையாள்கின்றன என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், தமிழ் ஒரு வாழும் மொழியாக இருக்க வேண்டுமானால், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை அந்த இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்,” என்று குறிப்பிட்டார் ‘ஸ்டோரிலேப் அகாடமி’யின் ஏஐ பயிற்றுவிப்பாளர் சஞ்சய் முத்துக்குமரன், 25.

ஏஐ பயன்பாடு மாணவர்களின் விமர்சனச் சிந்தனையை எளிதில் பாதிக்கலாம். அதைத் தடுக்க, இறுதிப் பதிலை வழங்காமல் மாணவர்களை வழிநடத்தும் ‘கைடட் லேர்னிங்’ (guided learning) முறையைப் பள்ளிகளும் பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“தேர்வுகளுக்குத் தயாராவதற்கும், விடை தெரியாத கேள்விகளுக்கு வழிமுறைகளைக் கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். இதுவரை எனக்கு இந்த பயிலரங்கில் மிகவும் பிடித்தது, ‘கோஸ்டார்’ (COSTAR) கட்டமைப்பு பற்றி அறிந்துகொண்டதுதான். இந்தப் பயிலரங்கு மீண்டும் நடைபெற்றால் என் நண்பர்களுக்கும் நான் நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்,” என்றார் பயிலரங்கில் கலந்துகொண்ட எட்ஜ்ஃபீல்ட் உயர்நிலை பள்ளி மாணவர் குகன், 13.

“இந்தப் பயிலரங்கில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் கற்பித்த ‘கோஸ்டார்’ (COSTAR) கட்டமைப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏஐ எத்திக்சின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன். ‘கைடட் லேர்னிங்’ மூலம் நாம் செயற்கை நுண்ணறிவிடம் இருந்து நேரடியாகப் பதில்களைப் பெறாமல், கற்றல் முறையில் குறிப்புகளாகக் கேட்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்,”என்றார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலை பள்ளி மாணவர் சஞ்சய், 14. 

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப அவர்கள் பொறுப்புடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் கற்றுக்கொடுக்கும் இதுபோன்ற இலவசப் பயிலரங்குகள் இளைய சமுதாயத்திற்குப் பெரும்பங்காற்றுகின்றன என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கப்பூர்இந்திய மாணவர்கள்செயற்கை நுண்ணறிவு