கணக்காய்வுத் துறையில் பட்டம்பெற்று முதலீட்டு வங்கிகளில் உயர் பதவிகளை வகுத்திருந்த 55 வயது ஹேமமாலினி, 11 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பாலர் பள்ளித் தமிழாசிரியாராகப் பணி மாற முடிவெடுத்தார்.
பிஎன்பி பரிபாஸ், பார்க்லேஸ், பேங் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் உள்ளிட்ட முதல்தர பன்னாட்டு நிதி நிறுவனங்களில் பணியாற்றி, துணைத் தலைவராகவும் வட்டார நிர்வாகி வரை உயர்ந்த குமாரி ஹேமமாலினி, பலரது கனவு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவர்.
ஆனால் அவர், அந்த வாழ்க்கையைக் கைவிட்டு பாலர் பள்ளித் தமிழாசிரியராகத் தொழில் மாறினார்.
பிசிஎஃப் பாலர் பள்ளி ஒன்றில் குமாரி ஹேமமாலினியின் உருவாக்கத்தில் தமிழ் மொழிக்கென்ற தனிப்பகுதியின் சுவர்கள் முழுவதும் வண்ணத் தமிழ் எழுத்துகள், படங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தும் இங்கு எழுதி ஒட்டப்பட்டுள்ளது. வகுப்பில் கற்கும் அவரது மூன்று மாணவர்களுக்குச் செழுமையான மொழிக்கற்றல் சூழலைத் தெளிவாகக் காண முடிகிறது.
மேல்நிலைத் தேர்வில் உயர் தமிழிலும் கணக்காய்வுப் பாடத்திலும் சிறந்த தேர்ச்சிபெற்ற குமாரி ஹேமமாலினி, தமிழ்த் தேர்ச்சிக்காக தமிழ்ப் பேரவையிலிருந்து விருதுபெற்றதை மலர்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
வாழ்வாதாரத்திற்காக கணக்காய்வுத் துறையைத் தெரிவுசெய்த குமாரி ஹேமமாலினி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
கணக்குத் தணிக்கையாளர் வேலை பார்த்துக்கொண்டு சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காய்வாளராகத் தகுதிபெற்று பிறகு முதலீட்டு வங்கித்துறையில் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் மீதான பற்றுதலும் ஈடுபாடும் வங்கித்துறையில் பெற்றிருந்த பதவி, சம்பளத்தை விஞ்சியுள்ள நிலையில் குமாரி ஹேமமாலினி தமது உணர்வுகளைப் பின்தொடர முடிவு செய்தார்.
2013ல் வங்கித்துறையை விட்டு விலகிய பிறகு, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அடித்தள அமைப்பில் தலைமைப் பொறுப்பேற்று பாலர் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார். உயர்நிலைப் பள்ளி கணக்காய்வு ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியபோதும் அதனை அவர் ஏற்கவில்லை.
கொவிட்-19 காலகட்டத்தில் பாலர் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் இந்த வேலையில் முழு நேரமாகச் சேர முடிவெடுத்தார். தமிழாசிரியர்களுக்குப் பற்றாக்குறை உள்ளதை அறிந்த குமாரி ஹேமமாலினி, சிங்கப்பூரில் தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாகத் தழைக்க வைப்பதற்கு இந்தப் பணி பெரிதும் உதவும் என உணர்ந்தார்.
மொழியார்வம் மட்டுமின்றி பிள்ளைப் பராமரிப்பு, நடனம், புத்தாக்கம் போன்றவற்றிலும் நாட்டம் கொண்டுள்ள தமக்கு இவை அனைத்தையும் ஒருசேர தரும் தனிச்சிறப்பு, பாலர்ப்பள்ளி தமிழாசிரியர் பணிக்கு உரிய தனிச்சிறப்பு என்று கூறினார்.
மனநிறைவுக்காக இந்த வேலையை ஏற்றுக்கொண்டாலும் பாலர் பள்ளி ஆசிரியர் பணி எளிதன்று என குமாரி ஹேமமாலினி கூறினார்.
“எனது முன்னாள் துறையில் நான் பற்பல சான்றிதழ்களைப் பெற்றிருந்தபோதும் பாலர் கல்விக்கென்று புதிய கல்வித்தகுதியைப் பெற மீண்டும் படிக்க வேண்டியிருந்தது.
“அத்துடன், பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு ஆசிரியர் பணிக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதைக் கருத்தில்கொண்டு கற்பிக்க வேண்டியிருந்ததையும் குறிப்பிட்டார். இந்தச் சவால்களை உற்சாகத்துடன் கையாண்டு பிஞ்சு மனங்களில் தீந்தமிழை விதைக்கும் அரும்பணி நிறைவு தருவதாகக் குறிப்பிட்டார்.
வாழ்க்கைக்கான வரவுசெலவு கணக்கைப் போட்டபோது, குமாரி ஹேமமாலினி கைவிட்ட பணத்தைக் காட்டிலும், தமிழ்வழி அவர் துய்த்த மனநிறைவே அதிகமானது. இது வெறும் வேலை மாற்றமன்று, ஒரு மொழியின் மீதான ஈடுபாட்டின் அரியசான்று.

