அனிருத் இசையால் மறுவாழ்வு; நனவான ரசிகையின் கனவு

அனிருத் இசையால் மறுவாழ்வு; நனவான ரசிகையின் கனவு

2 mins read
581fc413-736c-45dd-ae92-3697b0d93994
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரைச் சந்தித்த தாஷா. - படம்: தாஷா ஷாமினி ராஜா
Google News Preferred Icon

பிரபல திரை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சிங்கப்பூருக்கு வந்தபோது அவரை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு 24 வயது தாஷா ஷாமினி ராஜாவுக்குக் கிட்டியது.

அவரது இசை தம் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றங்களைப் பற்றி தாஷா, பிப்ரவரி 4ல் இன்ஸ்டகிராமில் பதிவு செய்த காணொளி வழி விவரித்தார்.

View post on Instagram
 

அனிருத்தைச் சந்திக்க விரும்புவதாக இன்ஸ்டகிராம் காணொளியில் தாஷா குறிப்பிட்டிருந்தார்.

அவரது கனவு மூன்றே நாள்களில் மெய்ப்பட்டது. பிப்ரவரி 7ல் இஷ்தாரா (Ishtara) ஜுவல்லரி 40ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நிகழ்ந்த கொண்டாட்டங்களில் அனிருத்துடனான சந்திப்பு நடந்தது.

தற்போது ‘வின்ட்சேனிட்டி’ (Vindsanity) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் தாஷா.
தற்போது ‘வின்ட்சேனிட்டி’ (Vindsanity) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் தாஷா. - படம்: தாஷா ஷாமினி ராஜா

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், 2012ல் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ‘ஒய் திஸ் கொலவெறி டி’ என்ற பாடலின் மூலம் உலக அளவில் பெரும் கவனம் ஈர்த்தார்.

சிங்கப்பூரில் குறைந்தது ஐந்து பொது இசை நிகழ்ச்சிகளுக்காக அனிருத் மேடையேறியுள்ளார்.

தனிமையைப் போக்கிய இசை

கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்ட மனப் போராட்டங்களைச் சமாளிக்கவும், வாழ்வின் இருண்ட காலத்திலிருந்து மீண்டு வரவும் அனிருத்தின் இசை கைகொடுத்ததாக தாஷா கூறுகிறார்.

“சுற்றிலும் குடும்பமும் நண்பர்களும் இருந்தபோதும், என் துன்பம் பிறருக்குச் சுமையாக இருப்பதைத் தவிர்க்க தனிமையை நாடினேன்,” என்றார் தாஷா. ‘எனக்கென யாரும் இல்லையே’ என்ற அனிருத்தின் பாடல், தாம் தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்த்தியதாகத் தாஷா தமிழ் முரசிடம் கூறினார். “நமது உணர்வுகள் குறித்து எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருவருக்குப் புரிதல் உண்டு என்பதை அப்பாடல் நினைவூட்டியது,” என்று தாஷா கூறினார். இதுபோன்ற பாடல்கள் தாஷா மேலே உயர, படிக்கட்டுகளாக அமைந்தன.

‘வின்ட்சேனிட்டி’ (Vindsanity) குழுவில் சமூக ஊடக நிர்வாகியாகப் பணியாற்றி வரும் தாஷா, மின்னிலக்கப் பதிவுகளை உருவாக்குவதில் வல்லவர். சொந்த இன்ஸ்டகிராம் கணக்கை இதுவரையில் 17,800 பேர் பின்தொடர்கின்றனர்.

காணொளிப் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, தாஷாவின் கணக்கைப் பின்தொடரும் ரசிகர்கள் பலர் அவரது காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

சந்திப்புக்கு முந்தைய இரவில், ஆவலாலும் பதற்றத்தாலும் கண்ணயரக்கூட முடியவில்லை.
தாஷா ஷாமினி ராஜா

காணொளியைப் பதிவிட்ட ஏறத்தாழ ஆறு மணி நேரத்திற்குள் அனிருத்திடமிருந்து நேரடியாகப் பதில் வந்தது.

புகழைக் கடந்த நேயம்

திகைப்பையும் பூரிப்பையும் மாறி மாறி உணர்ந்த தமக்கு மனத்திடம் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகளை அனிருத் கூறியதாகத் தாஷா தெரிவித்தார்.

‘விரைவில் எனது குழு உங்களைத் தொடர்புகொள்ளும்’ என்ற அனிருத்தின் குறுஞ்செய்திக்குப் பிறகு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்புக்கு முந்தைய இரவில், ஆவலாலும் பதற்றத்தாலும் தம்மால் கண்ணயரக்கூட முடியவில்லை என்று தாஷா கூறினார்.

தமது தோழியுடன் சேர்ந்து சென்ற தாஷாவுக்காக அனிருத்தின் புன்னகையும் இன்சொற்களும் காத்திருந்தன. நன்றியின் அடையாளமாக அவருக்குச் சிறிய பொம்மையை அன்பளிப்பாக வழங்கினார் தாஷா. இசையால் தம்மை உருமாற்றிய கலைஞருடன் உறவாடிய அனுபவம் சொல்லொணா நிறைவு தந்ததாக தாஷா கூறினார்.

குறிப்புச் சொற்கள்