சூடான தேநீர், தின்பண்டங்கள், நண்பர்களின் கலகலப்பு ஆகியவற்றுடன் சுவைமிக்க தமிழ்க் கவிதைகள் பரிமாறப்பட்டன.
‘ஏந்திழை கண்’ என்ற இலக்கியக் குழு மாதந்தோறும் இலக்கிய ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்கிறது. கவிதை வரிகளை வாசிப்பதோடு அவ்வரிகளின் பொருளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள பங்கேற்பாளர்கள் முற்படுவர்.
மூன்று நண்பர்களின் கவிதை ஆர்வத்தில் உருவானதுதான், இந்த ‘ஏந்திழை கண்’ குழு என்று அதன் நிறுவனர் டாக்டர் இந்துமதி வெங்கடாசலம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“கொவிட்-19 காலகட்டத்திலிருந்து தொடங்கப்பட்ட முயற்சி இது. எங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும் என எண்ணி கவிதைகளை எழுதவும் ஆராயவும் தொடங்கினோம்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் மொழி, இலக்கியப் படிப்பைப் படித்திருந்த டாக்டர் இந்துமதி, கற்ற தமிழ்வழி பெற்ற இன்பத்தைப் பிறரிடத்திலும் சேர்க்க வேண்டும் என விரும்பியதாகக் குறிப்பிட்டார்.
“2023 டிசம்பரில் இந்த மாதாந்தரக் கவிதைக் கலந்துரையாடல் நிகழ்வு முறைப்படி தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் உடன் பயின்ற தமிழ் நண்பர்களும் இதற்கு வருகை தந்து ஆதரவளித்தனர்,” என்றார் டாக்டர் இந்துமதி.
அரவணைப்புடன் கற்றல் அகம், புறம் சார்ந்த சங்கப் பாடல்கள், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி ஆகியவற்றை வாசித்த இந்தக் குழுவினர், கடந்த ஆண்டு மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைப் படித்துக் கலந்துரையாடினர்.
தற்போது இவர்கள் சிற்றிலக்கிய வரிசையில் ‘கலிங்கத்துப் பரணி’யைக் கையில் எடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது கடவுள் வாழ்த்துப் பகுதி முடிந்து, ‘கடை திறப்புப்’ பகுதியைப் படித்து வருகிறோம். பரணியைப் புரிந்துகொள்ள சோழ மன்னர்களின் வரலாறு, அவர்களின் வம்சாவளி போன்ற வரலாற்றுப் பின்னணிகளையும் ஆராய்ந்து படிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆங்கில வழியிலும் வாசிப்பு
அரிய தமிழ் இலக்கியங்கள் நூலக அலமாரிகளிலும், பல்கலைக்கழகக் கல்வியரங்குகளிலும் ஒருசில ஆர்வலர்களுக்குள்ளேயே முடங்கிவிடக்கூடாது என்பது தங்கள் குழுவினரின் நோக்கம் என அவர் கூறுகிறார்.
“தமிழ்மீது ஆர்வமுள்ளோர் தமிழ்க் கவிதைகளை ஆங்கில எழுத்துகளில் வாசிக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்கிறோம். வாய் திறந்து உச்சரிக்கும்போதுதான் கவிதையின் சந்த நயத்தையும் அதன் உண்மையான பொருளையும் முழுமையாக உணர முடியும்,” என்று அவர் கூறினார்.
பங்கேற்க ஆர்வமுள்ளோர் டாக்டர் இந்துமதியை ivenkata@hotmail.com என்ற மின்னஞ்சல்வழி தொடர்புகொள்ளலாம்.


