அமைதியும் தொண்டும் இணைந்த ஈஸ்டர் கொண்டாட்டம்

அமைதியும் தொண்டும் இணைந்த ஈஸ்டர் கொண்டாட்டம்

2 mins read
318a9b8e-f228-45eb-b97d-f5364c5f86aa
(இடமிருந்து, நிற்பவர்கள்) லாரன்ஸ் வில்லியம், குளோரி இவெஞ்சலின் சாலமன், ஜோய்ஸ் ஷோபனா சாலமன், மிக்கெல் இசாண் ட்ரோ மெல்வின், மெல்வின் மார்க் சாலமன், இசடோரா ஷவித்ரா ஜெயச்சந்திரன், மிரெல்லா ஷனாயா மெல்வின் (குழந்தை), (அமர்ந்திருப்போர்) சாலமன் ஜோசப், ரூத் ரோஸ்லின் சாலமன், மெலடி சைடல் பீட்டர், ஜியா எவலினா லாரன்ஸ், லாரா இவானியா லாரன்ஸ். - படம்: கி.ஜனார்த்தனன்
Google News Preferred Icon

பல்லாண்டுகளாக அரசாங்க ஊழியராகப் பணியாற்றி, சிறைக்கைதிகளுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றிய 71 வயது சாலமன் ஜோசப், தமது குடும்பத்தினருடன் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகிறார்.

மெத்தடிஸ்ட் தமிழ்த் திருச்சபையைச் சேர்ந்த திரு சாலமன், வளரும் பருவத்தில் சிலேத்தார் ராணுவ முகாம் பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது தம் குடும்பத்தினர் வசித்ததை நினைவுகூர்ந்தார். தற்போது அவரும் மனைவியும் ஹவ்காங்கில் வசித்து வருகின்றனர்.

எட்டுப் பிள்ளைகளைக் கொண்ட எளிய குடும்பத்தில் வளர்ந்த சாலமன், தமது தந்தை கட்டுக்கோப்புடன் தங்களை வளர்த்ததாகக் கூறுகிறார். “அவர் கடுமையாக உழைத்துப் பிள்ளைகளான எங்கள் அனைவருக்கும் உணவு தந்தார். நாங்கள் இன்று வரை எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்,” என்று அவர் பெருமையுடன் கூறினார்.

வளர்ந்த காலகட்டத்திலும் 46 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையின்போதும் சமய நெறி வழுவாமல் ஞாயிறுதோறும் தேவாலயம் செல்வதாகத் திரு சாலமன் கூறினார். தற்போது அவருக்கு மூன்று பிள்ளைகளும் ஐந்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

ஈஸ்டர் திருநாள் தங்கள் குடும்பத்தில் சடங்கு மட்டுமன்று என்று கூறிய 68 வயதான அவரது மனைவி ரூத் ரோஸ்லின் சாலமன், தங்கள் ஆன்மிகப் பயணத்தை விவரித்தார்.

“சாம்பல் புதன் முதல் அடுத்த 40 நாள்கள் லெந்து (Lent) காலத்தின்போது நாங்கள் இறைவனை அதிகமாகத் தியானிப்போம். சில பேர் நோன்பு நோற்பார்கள். குறிப்பாக, பெரிய வியாழனன்று திருச்சபைக்குச் சென்று திருவிருந்துப் பந்தியில் (Communion) பங்கேற்பதை அவர்கள் முக்கியமான கடமையாகக் கருதுகின்றனர்,” என்று திருவாட்டி ரூத் கூறினார்.

இத்தம்பதியரின் ஆக இளைய மகனான 36 வயது மெல்வின் மார்க் சாலமனுக்கும் இந்த ஈஸ்டர் சிறப்பு வாய்ந்தது. கட்டுமானத் துறையில் மேலாளராகப் பணிபுரியும் மெல்வினுக்கு, கடந்த டிசம்பர் 21ல் மிரெல்லா ஷனாயா மெல்வின் என்ற பெண் குழந்தை பிறந்தது.

“என் மூத்த மகனுடன் சேர்த்து இப்போது எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவ்வாண்டு என் குடும்பம் முழுமையடைந்துள்ளது,” என்று திரு மெல்வின் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அன்பும் சமாதானமும் தங்களது குடும்பத்தை ஆழமாகப் பிணைப்பதாக சாலமன் தம்பதியர் கூறுகின்றனர். வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அதை அன்றைய நாளே தீர்த்துக்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குடும்பத்திலும் வாழ்க்கையிலும் நடந்துகொள்ள வேண்டிய முறையைத் தாய், தந்தையிடமிருந்து தாம் கற்றதாக மூத்த பிள்ளை ஜோய்ஸ் ஷோபனா சாலமன் தெரிவித்தார்.

“இறைவனுக்கு நாங்கள் மனமுருகிச் செய்யும் ஜெபமும் பின்பற்றும் நன்னெறிகளும் எங்களை வளப்படுத்தியுள்ளன,” என்று அரசாங்க ஊழியராகப் பணியாற்றும் 45 வயது ஜோய்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்