சிங்கே அணிவகுப்பின் கதைகளைச் சொல்லும் சிறாருக்கான சித்திர நூலை இப்போது தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் சிறுவர்கள் வாசித்து மகிழலாம்.
‘மை லிட்டில் சிங்கே ஃபுளோட்’ என்ற சிறார் நூலை மக்கள் கழகம் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வெளியிட்டது.
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் நூல், வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
‘மை லிட்டில் சிங்காய் ஃபுளோட்’ நூல், 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியீடு கண்டது.
தமிழில் அந்த நூல் இப்போது ‘என் சின்னஞ்சிறு சிங்கே மிதவை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதை வடிவத்தைக் கொண்டுள்ள நூல், சிங்கப்பூரின் புகழ்பெற்ற சிங்கே அணிவகுப்பைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு ஒற்றுமை, சமூக உணர்வு போன்ற நற்பண்புகளையும் விதைக்க முற்படுகிறது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர், ‘என் சின்னஞ்சிறு சிங்கே மிதவை’ நூல் தங்கள் பிள்ளைகளின் தமிழ்மொழி ஆர்வத்தை வளர்க்க உதவும் என்று பகிர்ந்துகொண்டனர்.
தங்கள் பிள்ளைகளின் அடிப்படை மொழிவளத்தை வளர்க்க நூல் உதவும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து வயது மகள் கவிநேத்ராவிற்குத் தமிழ்மொழியைக் கற்பித்துவரும் அன்பரசன் முத்தரசன், “தமிழ்மொழியைத் தமிழ் நூல் மூலம் கற்பிப்பதன் வழி நாம் கலாசாரத்தைப் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க முடியும்,” எனக் கூறினார்.
செல்வபாரதி அருணாச்சலபாண்டியன், 35, தமது ஐந்து வயது மகன் மொழியதியன் கார்த்திக்குடன் வீட்டில் தமிழ் மட்டுமே உரையாடி வருகிறார்.
“எனது மகன் தமிழில் தெரியாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னாலும் அதற்கான தமிழ் வார்த்தையை அவருக்குக் கற்றுக்கொடுத்து மீண்டும் சொல்லிப் பழக ஊக்குவிப்பேன். அதோடு, வீட்டில் தமிழ் எழுத்துகளையும் எழுத பயிற்சி தருகிறேன்,” என்றார் திருவாட்டி செல்வபாரதி.
தீவெங்கும் உள்ள பாலர் பள்ளிகளுக்குத் தாய்மொழிகளில் உள்ள கிட்டத்தட்ட 3,000 சிங்கே நூல்களை அனுப்பிவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொது நூலகங்களில் அந்த நூல்கள் வைக்கப்படும். நூலின் மின்பதிப்புகளும் வெளியிடப்பட்டன.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிங்கே நூலை வாசித்துக் காட்டுவதற்கான பயிற்சிகளை வழங்கும் தொண்டூழியத் திட்டம் ஒன்றையும் மக்கள் கழகம் அறிமுகம் செய்தது. அதில் கிட்டத்தட்ட 50 தொண்டூழியர்கள் பயிற்சிப் பெற்றனர்.
தேசிய மரபுடைமை நிலையம், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை அந்தத் தொண்டூழியத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றன.
திட்டத்தின் மூலம் தொண்டூழியர்கள் பலரும் சிங்கே நூலைக் கதையாகச் சொல்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்தகைய பயிற்சியைப் பெற்றவர்களில் ஒருவர் 49 வயது திருவாட்டி பிரமிளா கருப்பையா.
“‘என் சின்னஞ்சிறு சிங்கே மிதவை’ நூலைக் கதையாகச் சொல்வதற்கான பயிற்சிகளில் பங்கேற்ற அனுபவம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்தபோது நான் சிறுமியாக இருந்தபோது சிங்கே ஊர்வலத்தைக் கண்ட நினைவுகள் மீண்டும் கண்முன் வந்தன. 1980களில் எனது தந்தையும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்,” என்று திருவாட்டி பிரமிளா கூறினார்.
“பள்ளிப்பருவத்தில் சிங்கே பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ‘சிங்கே’ என்பது ஒரு ஹொக்கியன் வார்த்தை என்பதையும் ஆடை உணர்வைப் பற்றியது என்பதையும் பயிற்சி மூலம் அறிந்துகொண்டேன்,” என்றார் 44 வயது ராஜமூர்த்தி கருப்பையா.
‘ஏகே தியேட்டர்’, ‘ஏகேடி கிரியேஷன்ஸ்’ நிறுவனங்களின் இயக்குநர் திருவாட்டி ராணி கண்ணா, சிங்கே நூலை எப்படிக் கதையாகச் சொல்வது என்பதைப் பயிலரங்கு மூலம் கற்பித்தார்.

