தமிழ்மொழியை இளையர்களிடம் கொண்டுசேர்க்க நாம் இருமொழிப் பயன்பாட்டு முறையை அணுக வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டுள்ளார் இளம் பேச்சாளர் டாக்டர் மா. பிரெமிக்கா.
அவரின் இந்தக் கருத்தாழமிக்க சொற்களுடன் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து நடத்திய ‘இன்பத் தமிழும் இளைய தலைமுறை ஈடுபாடும்’ என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. ஒன்பதாவது ஆண்டாகத் தொடரும் இந்நிகழ்ச்சி, தமிழின் பழமையையும் இளைய தலைமுறையின் புதுமையையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்தது.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துகொண்டார். அவர் ஆற்றிய உரை, தமிழின் உலகளாவிய வேர்களைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்தது.
“எகிப்து நாட்டுப் பிரமிடுகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கடல்கடந்து தமிழைக் கொண்டுசேர்த்ததற்கான சான்று. அந்தத் துணிச்சலும் மொழிப்பற்றும் இன்றைய இளைய தலைமுறையினரிடமும் தொடரவேண்டும்,” என்று திரு தினேஷ் கேட்டுக்கொண்டார்.
கல்வி, சமூகத் தொண்டு, மருத்துவத் துறை என மூன்று பிரிவுகளாகப் பிரித்துத் தமிழ்ப் பயணத்தைப் பற்றிய தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் டாக்டர் பிரெமிக்கா.
“சரளமாகத் தமிழ் பேசாத இளையர்களையும் சமுதாயத்தில் இணைக்க நாம் வழிகளைத் தேட வேண்டும்,” என்றார் அவர்.
இளையர்களின் ஈடுபாட்டை வலியுறுத்தும் வகையில், முனைவர் உமையாளும் திருவாட்டி நர்கிஸ் பானுவும் இணைந்து எழுதிய ‘மருமகனே வா!’ என்ற நாடகப் படைப்பும் இளையர்களால் நிகழ்ச்சியில் மேடையேற்றப்பட்டது.
நாடகம் கலகலப்பான ‘மருமகன் நேர்காணலை’ மையமாகக் கொண்டு, சங்க இலக்கியம் முதல் தற்காலப் பாடல்கள் வரை தமிழின் சிறப்புகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியது. உறவு முறை, சங்கப்பாடல் விளக்கம், விடுகதைகள் மூலம் காதலன் தன் அறிவாற்றலை நிரூபிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தொடர்புடைய செய்திகள்
நாடகத்தில் ‘அம்மம்மா’ என்ற மூத்த கதாபாத்திரமாக நடித்திருந்த திருவாட்டி பானு, “பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் இப்படைப்பு, இளையர்களிடையே குறைந்துவரும் தமிழ்ப் புழக்கத்தைச் சுட்டிக்காட்டுவதோடு, இளையர்கள் தமிழ்மொழியுடன் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது,” என்றார்.
பார்வையாளர்களை மெய்மறக்க வைக்கும் விதமாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஈடுபாட்டுடன் வில்லுப்பாட்டு அங்கம் இடம்பெற்றது. அமுது தமிழின் அழகை அரங்குக்கே நினைவூட்டும் வகையில், மணி சப்தமும் மிருதங்க சப்தமும் ஒலிக்க மாணவர்கள் தாய்த் தமிழை வர்ணித்துப் பாடினர்.
பாரம்பரிய மிருதங்கத்தையும் நவீன இசைப்பலகையையும் இணைத்து வழங்கப்பட்ட இப்படைப்பு, கால மாற்றத்திற்கேற்ப கலை பரிணமிப்பதையும் மரபும் நவீனமும் ஒன்றிணைவதையும் பறைசாற்றியது. இது, தொன்மையும் நவீனமும் இணையும் தளமாகத் திகழ்ந்தது.
‘தமிழ், வகுப்பறை பாடம் மட்டுமன்று அது வாழ்வியல் பாடம்,’ எனும் கருத்தை முன்வைத்தது, திருமதி சர்மிலா தீபன் இயக்கிய வில்லுப்பாட்டு.
“இளையர்கள் ஈடுபாட்டுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, எனக்குத் தமிழ் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்தது,” என்றார் குவீன்ஸ்வே உயர்நிலைப்பள்ளி மாணவி மேதினி கபிலன், 16.
இளையர் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இன்பத் தமிழின் புகழைப் போற்றும் வண்ணமும் அமைந்து இந்நிகழ்ச்சி.

