மெய்தீன், உமறுப்புலவர் விருதுகள்: காதர், சந்திரதாசின் சாதனைக்கு அங்கீகாரம்

மெய்தீன், உமறுப்புலவர் விருதுகள்: காதர், சந்திரதாசின் சாதனைக்கு அங்கீகாரம்

2 mins read
31fd6d56-37b0-426a-88b2-746ca797c155
நிகழ்ச்சி மேடையில் (இடமிருந்து) முகைதீன் பிச்சை, நசிர் கனி, ராஜ் முஹம்மது, டாக்டர் மு.அ.காதர், எஸ். சந்திரதாஸ், டாக்டர் ஹமீது ரசாக், மு.அ. மசூது. - படம்: சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
Google News Preferred Icon

சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் ‘டிஜிட்டல் மலரில் தமிழின் நறுமணம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் சிறப்பாக நடந்தது. 

அந்த விழாவில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இருபெரும் சாதனையாளர்களுக்கு மதிப்புமிகு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

முனைவர் மு.அ.காதருக்கு அ.நா.மெய்தீன் விருது

மேடையில் விருது பெற்ற முனைவர் மு.அ.காதர்.
மேடையில் விருது பெற்ற முனைவர் மு.அ.காதர். - படம்: சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

நிகழ்ச்சியில் முனைவர் மு. அ. காதருக்கு 2026ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘அ.நா.மெய்தீன்’ விருதை டாக்டர் ஹமீது ரசாக் வழங்கினார்.

முனைவர் மு.அ.காதர் சிங்கப்பூரின் மிகச் சிறந்த பட்டயக் கணக்காய்வாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். 

வணிகவியலில் முதுகலையும், நிர்வாகவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர், ‘காதர் & கோ’ என்ற நிதி ஆய்வு நிறுவனத்தைக் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

அத்துடன், 1994ஆம் ஆண்டு முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர் மற்றும் தன்முனைப்புப் பேச்சாளர் ஆவார். 

ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவராக இருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்விப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.

பல இனச் சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் வசதி வாய்ப்பற்றோர் நலன்களில் இவர் காட்டிய அக்கறைக்காக அவருக்கு இவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

எஸ்.சந்திரதாசுக்கு  உமறுப்புலவர் விருது

மேடையில் விருது பெற்ற திரு எஸ். சந்திரதாஸ்.
மேடையில் விருது பெற்ற திரு எஸ். சந்திரதாஸ். - படம்: சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் முன்னணி வர்த்தகருமான திரு எஸ். சந்திரதாஸ் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘உமறுப்புலவர் விருது’ வழங்கப்பட்டது. 

துருக்கியில் சிங்கப்பூரின் தூதராகப் பதவி வகித்தபோது, அவர் ஆற்றிய நற்பணியைப் பாராட்டி சிங்கப்பூர் அரசு 2014ல் அவருக்கு பொதுச் சேவைக்கான நட்சத்திர விருதை வழங்கிச் சிறப்பித்தது.

சிண்டா, இந்திய மரபுடைமை நிலையம், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகியன உருவாவதற்கு இவர் அரும்பங்காற்றியுள்ளார். 

குறிப்பாக, 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உமறுப்புலவர் கல்வி உதவி நிதியின் நிறுவனராகவும் அறங்காவலராகவும் இருந்து எண்ணற்ற மாணவர்களின் உயர்கல்விக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

“விருது பெற்ற இருவரும் தமிழ்மொழிக்காகவும் மக்களுக்காகவும் ஆற்றியப் பங்கிற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த விருது அமைந்தது. மேலும், நமது வருங்கால இளைய தலைமுறையினர் இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் இவர்களைப் போல நாட்டு மக்கள், சமுதாயம், சிங்கப்பூரினுடைய வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவ தங்கள் பங்கை ஆற்ற முன்வர வேண்டும் என்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டது,” என்றார் சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் மசூது அப்துல் ரஹ்மான்.

பல்லாண்டுகளாகத் தொடரும் இவரது சமூக ஒருங்கிணைப்புப் பணிகளும், தலைமைத்துவப் பண்பும் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்