உடல் எடையைக் குறைக்க ஆண்களுக்கு ஆலோசனை

உடல் எடையைக் குறைக்க ஆண்களுக்கு ஆலோசனை

4 mins read
தேநீர் குடித்தே தொப்பையைக் குறைப்போம்; சில வேளை சாப்பிடாமல் இருந்தே உடற்பருமனைத் தவிர்ப்போம் என்பது மட்டுமே உடற்பருமனுக்கு தீர்வாகாது என்கிறார் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவரும் இரைப்பைக் குடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார்
47d4d1ea-9f48-4b3b-a7fa-0e1b1f00a8a6
டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் - இரைப்பைக் குடல் சிகிச்சை, அகநோக்கியல் நிபுணர். - படம்: சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை
multi-img1 of 2
Google News Preferred Icon

ஆண்களின் உடல் நலன் அதிமுக்கியமானது என்று கூறி நேர்காணலைத் தொடங்கினார் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவரும் இரைப்பைக் குடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார்.

உடற்பருமனைச் சரிசெய்வதற்காகப் பரவலாக மேற்கொள்ளப்படும் பழக்கவழக்கங்களைப் பற்றியும் அவர் பேசினார்.

“உடற்பருமனைச் சரிசெய்ய இன்றைய அவசர உலகில், பலர் யூடியூப் மருத்துவர்களாக மாறிவிடுகிறார்கள். 

“இவர்கள் ஒருபுறமிருக்க, புத்தாண்டு பிறந்தவுடனேயே, “இந்த ஆண்டு எப்படியும் எடையைக் குறைத்தே தீருவேன்,” என்று உறுதிமொழி எடுத்து, உடற்பயிற்சிக்கூடத்தில் உறுப்பினர் அட்டையை வாங்கி, அதன் பிறகு அந்தப் பக்கமே செல்லாத பலரும் இருக்கிறார்கள். 

“இன்னும் சிலரோ, இணையத்தைப் பார்த்து வேறு நாடுகளில் விற்கப்படும் மூலிகைத் தேநீரைக் வாங்கிக் குடித்தால் போதும். உடனே உடல் எடை குறைந்துவிடும் என்று நம்பி ஏமாறுகிறார்கள்.

‘‘கொஞ்ச தூரம் சைக்கிள் ஓட்டிவிட்டால், நம் கடமை முடிந்தது,’’ என்று நினைத்துக்கொண்டு, உடனடியாகக் கடைக்குச் சென்று ஒரு பெரிய ‘மில்க் ஷேக்’கையோ இனிப்பு நிறைந்த ‘ஐஸ் டீ’யையோ குடித்துவிட்டுத் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வோரையும் காணமுடிகிறது,’’ என்றார் டாக்டர் ரவிசங்கர்.

அகநோக்கியல் நிபுணரான அவர், “சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக உடல் பருமனாக உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் போகிறது,” என்று கவலை தெரிவித்தார். 

உடல் பருமனாக உள்ளவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்தாய்வு காட்டுகிறது.
உடல் பருமனாக உள்ளவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்தாய்வு காட்டுகிறது. - வரைகலை: தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கருத்தாய்வு 2024

பள்ளிக்குச் செல்லும் மாணவர்களில், பத்துப் பேரில் அறுவருக்கு உடல் பருமன் பிரச்சினை இருப்பதாகச் சொன்ன அவர், சிறுவயதிலேயே உடல் பருமனாக இருக்கும் அந்தப் பிள்ளைகள், வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குச் செல்லும்போது அதே உடல் எடையில் தொடரச் சாத்தியம் உள்ளதாகக் கூறினார்.

இந்தியச் சமூகத்தினரின் ‘மாறாத’ கண்ணோட்டம்

‘‘இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை, பிள்ளைகள் ‘கொழு கொழு’ என்று இருந்தால் அது ஆரோக்கியம் என்று நினைக்கும் பலரின் கண்ணோட்டம் மாறவில்லை என்பதை இன்றளவும் காணமுடிகிறது,’’ என்றார் டாக்டர் ரவிசங்கர். சிறுவயதிலேயே உடல் பருமனைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது வயது முதிர்ந்த காலத்தில் தீவிரமான பல மருத்துவச் சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்தார்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சு இரைப்பு, தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, முக்கியமாக, மூத்தோருக்கு முதுகுத்தண்டு வலி, ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு என்றும் அவர் கூறினார்.

பட்டினி இருந்தால் பலன் கிடைக்குமா?

“இன்று இளையர்கள் பலர் உடனே எடையைக் குறைக்க வேண்டும் என்று ‘கிராஷ் டயட்’ அல்லது பட்டினி இருக்கும் முறைகளைக் கையாள்கிறார்கள். இதுபோன்ற தீவிரக் கட்டுப்பாடுகளால் முதல் மூன்று மாதங்களில் எடை குறையலாம். ஆனால், உடலில் ஏற்படும் ‘ஹோர்மோன்’ மாற்றங்களால், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதீத பசி எடுக்க ஆரம்பிக்கும்.

“இதனால், பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவதால், அடுத்த சில மாதங்களில் இழந்த எடையைவிட இருமடங்கு எடை கூடிவிடும். மருத்துவத்தில் இதையே ‘யோ-யோ’ பேட்டர்ன் என்று அழைக்கிறார்கள்,” என விளக்கினார் டாக்டர் ரவிசங்கர்.

பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்கள் தங்களுக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது என்பதை உணர்ந்து மருத்துவரிடம் செல்வது மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார். 

அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, அளவுக்கதிகமான உடல் எடையால் அவதிப்படுபவர்களுக்கு அதனைக் குறைக்க அகநோக்கியல் முறைகள் சிறந்த நவீனத் தீர்வாக அமைவதாய் அவர் தெரிவித்தார். இது அறுவை சிகிச்சை போன்றது அன்று; தழும்பு இருக்காது; இதன்மூலம், 15 முதல் 20 கிலோகிராம்வரை எடையைக் குறைக்க முடியும் என்றும் அவர் சொன்னார். “எனினும், எந்தவொரு மருத்துவச் சிகிச்சையும் தற்காலிக உதவி மட்டுமே. நிரந்தரத் தீர்வு என்பது அவரவர் கையில்தான் உள்ளது,” என்றார் டாக்டர் ரவிசங்கர். ஆரோக்கியமான வாழ்விற்குப் பின்பற்றவேண்டிய 3 முக்கியக் கடமைகளை விவரித்தார் அவர். அதில் உணவு முறைத் திட்டமிடல் முதலிடம் பிடித்தது. 

‘‘நாளை நாம் என்ன சாப்பிடப் போகிறோம் என்பதை அதற்கு முந்தைய நாளே திட்டமிட வேண்டும். உணவில் புரதச்சத்து அதிகமாகவும் மாவுச்சத்து குறைவாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

“அக்காலத்து மக்கள் விவசாயம், களப்பணி எனக் கடின உடல் உழைப்பில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு மாவுச்சத்து அதிகம் தேவைப்பட்டது. ஆனால், தற்போது அதிக நடமாட்டமில்லாத, இருக்கையில் அமர்ந்தவாறே பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் உள்ளதால் உணவுப் பழக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

‘‘பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், சமைக்கும் நேரத்தைச் சேமிப்பதாக எண்ணி உடனடி உணவு, விரைவு உணவு, பொறித்த உணவு ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முன்பு, அவ்வப்போது பிரியாணியைச் சாப்பிட்டுவந்த காலம் மாறி, இப்போது பிரியாணி அல்லது அசைவம் இல்லாத மதிய உணவைச் சாப்பிடமுடியாது என்ற மனநிலையில் பலர் இருப்பதைப் பார்க்கலாம்,’’ என்று டாக்டர் ரவிசங்கர் சொன்னார்.

மேலும், உடல் நலத்தைப் பாதுகாக்கக் கடுமையான பயிற்சிகள் தேவையில்லை. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஏதேனும் ஓர் உடல் உழைப்பு சார்ந்த பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

‘‘வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்கள் நடந்துவிட்டு, பிறகு அடுத்த வேலையில் ஈடுபடலாம். 

‘‘உடற்பயிற்சிக் கூடத்தில் சில வாரங்கள், காணொளிகளில் வரும் ஆலோசனைகள், விளம்பரத்தில் வரும் தேநீர் போன்றவற்றால் மட்டுமே உடல் எடையைக் குறைக்கலாம் என்று நினைத்தால், அது நிலையான பலனைத் தராது.

‘‘ஏனெனில், உடல் பருமன் என்பது ஒரே நாளில் வருவதன்று. எனவே, அது ஒரே நாளில் மறைந்துவிடாது. முறையான விழிப்புணர்வு, உணவுப் பழக்கவழக்க மாற்றங்களைக் கொண்ட வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலம் மட்டுமே, ஆண்கள் தங்களுடைய உடல்நலனைப் பாதுகாத்து, நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைப் பெற முடியும்,’’ என்றார் டாக்டர் ரவி.

குறிப்புச் சொற்கள்