சிங்கப்பூரின் புகழ்பெற்ற மூத்த ஊடகவியலாளர் பி. கிருஷ்ணன் எழுதிய ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ வானொலி நாடகத்தின் மேடை வடிவத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக இடம்பெற்றிருந்தார் யோகினி தேவதாஸ். தற்போது அதே நாடகக் கதையின் மற்றொரு தயாரிப்புக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றதில் 33 வயது யோகினி மனநிறைவை உணர்கிறார். தமிழ்மொழி விழாவின் அங்கமாக, அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம், நகைச்சுவை கலந்த ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ எனும் சுவாரசியமான நாடகத்தை ஸ்பிரிங் உள்ளரங்கத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) மேடையேற்றியது. திரு பி. கிருஷ்ணன் புனைந்த வானொலி நாடகத்தை மறுவடிவமைத்து, மக்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் நாடகம் அமைக்கப்பட்டது.
1960களிலும் 1970களிலும் கம்பத்து வீடுகளிலிருந்து வெளியேறி, அடுக்குமாடி வீடுகளில் புதிதாகக் குடியேறத் தொடங்கியவர்களின் அனுபவங்களை நகைச்சுவையாகத் தொகுத்துக் காட்டியது நாடகம்.
அக்காலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பேட்டைகளில் வசித்தாலும் அண்டை வீட்டார் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வர். ஆனால், இக்காலத்தில் அவ்வாறு நடப்பதில்லை என்றார் நாடக இயக்குநர் யோகினி.
நாடகத்தின் ஒரு காட்சியில் மனவுளைச்சலையும் கடுங்கோபத்தையும் பொறுக்க முடியாமல், பாத்திரங்களைத் தரையில் வீசி, அதிகக் கூச்சல் எழுப்புவார் அண்டை வீட்டுக்காரர் ஒருவர்.
அலறல் சத்தத்தைக் கேட்ட மற்றோர் அண்டை வீட்டுக்காரர், உடனே ஓடிச்சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்.
“அண்டை வீட்டாரையும் மக்கள் கவனித்துக்கொண்ட ஒருகாலம் இருந்ததை இன்றைய சிங்கப்பூரர்களுக்கு நினைவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் உறவுகளைப் புதுப்பிக்கும் உற்சாகத்தை அவர்கள் பெற வேண்டும் என நினைக்கிறோம்,” என்று திருவாட்டி யோகினி கூறினார்.
நாடகம் நடைபெற்றபோது தமிழ் வசனங்களுக்கு நிகரான ஆங்கிலத் துணையுரைகளும் திரையில் காட்டப்பட்டன.
இளையர்கள் வரவேற்பு
இந்நாடகத்தை தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவர்களும் ரசித்து மகிழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஒருவரான ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி மாணவர் அத்வைத் லட்சுமிநாராயணன், 15, இதற்கு முன்பு சிங்கப்பூரில் தமிழ் நாடகங்கள் பின்தங்கியிருப்பதாகக் கருதியிருந்தார்.
“சிங்கப்பூரர்கள் இடையே திறமைமிக்க நடிகர்கள் பலர் உள்ளனர் என்பதை இந்த நாடகத்தின்வழி உணர்ந்தேன். இதுபோன்ற தளங்கள் நாடகத்தில் நடிப்போருக்கும் நடிக்க விரும்புவோருக்கும் பேரளவில் கைகொடுக்கும்,” என்றார் அவர்.
நடிகர்களின் உடல்மொழி, ஏற்ற இறக்கம், வசனம் ஆகியவை தம்மை வெகுவாய் ஈர்த்ததாக அகமது இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளி மாணவி லாஷா சங்கீர்த்தனா, 13, தெரிவித்தார்.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் அனுபவத்தைப் பெறுவதற்காக மாணவர்களை இங்கு அழைத்துவந்ததாக ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மீனாள், 48, தெரிவித்தார்.
“ஒவ்வோர் உணர்ச்சிக்கும் எத்தகைய சொற்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் நடிகர்களிடம் உள்ள துணிச்சல், தன்னம்பிக்கை போன்ற பண்புகளையும் மாணவர்கள் இங்குக் கற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
நடிகர்களின் அனுபவம்
அண்ணாசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த த.வ. தமிழ்வாணன், 35, பார்வையாளர்களை மகிழ்வித்ததில் மனநிறைவு அடைந்ததாகக் கூறினார். இந்தியாவில் இருந்தபோது குறும்படங்களில் நடித்த இவர், சிங்கப்பூருக்கு வந்தவுடன் அதிபதி நாடகக் குழு தமக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததாகக் கூறினார். “பயிற்சி மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சில இடங்களில் பார்வையாளர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பயிற்சி மேற்கொண்டோம். நாங்கள் நடிக்கும்போது, அவர்கள் அந்தந்த இடங்களில் கலகலவென்று சிரித்தது மேடையில் இருக்கும் எங்களுக்குப் புத்துணர்வு அளித்தது,” என்று அவர் பகிர்ந்தார்.
சிறு வயதிலேயே வானொலியில் இந்நாடகத்தைக் கேட்டிருந்ததாகப் பஞ்சநாதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்த விக்னேஷ்வரன் சுப்பிரமணியம், 39, குறிப்பிட்டார். புகழ்பெற்ற இந்த நாடகத்தை ஏற்கெனவே பலமுறை திறம்படப் படைத்துக் காட்டிய பின்னர், அதனை மீண்டும் அரங்கேற்றும்போது முன்பிருந்தோரின் உழைப்புக்கும் திறனுக்கும் ஈடுகொடுக்க முயல வேண்டும் என்ற மனப்போக்கு தமக்கு ஒருபுறம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். மறுபுறம், தங்கள் படைப்பும் சரியான முறையில் தனித்துவமிக்க படைப்பாகத் திகழ வேண்டும் எனும் குறிக்கோள் தமக்கு இருந்ததாகக் கூறினார். “ஆறு மாத காலம் பயிற்சி மேற்கொண்டோம். அதில் கற்றுக்கொண்டவற்றைக் கொண்டும் என்னுடைய அனுபவத்தைக் கொண்டும் நான் இதைச் செய்தேன்,” எனத் திரு விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் புழங்கப்படும் ‘ஜூம்போ ஜூம்போ’, ‘குசினி’ போன்ற சில வார்த்தைகள் கேள்விப்படாதவர்களுக்கு அவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நாடகம் வழங்கியதாகவும் திரு விக்னேஷ்வரன் கூறினார்.

